தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, மாநிலத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார். அவருடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். துணை முதலமைச்சராக மல்லு பாட்டி விக்ரமர்க்காவும் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டியும் அமைச்சராகவும் பதவியேற்று கொண்டார்கள்.


காங்கிரஸ் அளித்த வாக்குறுதி:


தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் சார்பில் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. பெண்களுக்கு மாத உரிமை தொகை வழங்கப்படும், கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும், முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் அளித்த இந்த வாக்குறுதிகள், அக்கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றின. 


இச்சூழலில், தெலங்கானா முதலமைச்சரான பிறகு, தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என ரேவந்த் ரெட்டி உறுதி அளித்திருந்தார். அந்த வகையில், முதலமைச்சராக பதவியேற்று கொண்டதை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு அரசு பணி அளித்துள்ளார் ரேவந்த் ரெட்டி. தனது முதல் கையெழுத்தை அதற்காக போட்டுள்ளார்.


ஹைதராபாத் நம்பல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ரஜினி என்ற மாற்றுத்திறளானி பெண், ரேவந்த் ரெட்டியை சந்தித்து தனக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கவில்லை என கூறினார். அப்போது, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ரஜினிக்கு அரசு பணி வழங்கப்படும் என ரேவந்த் ரெட்டி வாக்குறுதி அளித்தார்.


முதலமைச்சரான பிறகு ரேவந்த் ரெட்டி போட்ட முதல் கையெழுத்து:


இந்த நிலையில், முதுகலை பட்டதாரியான ரஜினிக்கு அரசு வேலை அளித்து தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் ரேவந்த் ரெட்டி. பதவியேற்று கொண்டதை தொடர்ந்து பேசிய ரேவந்த் ரெட்டி, "போராட்டங்கள் மற்றும் தியாகங்களை அடித்தளமாக கொண்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது.


சுதந்திரம், சமூக நீதி மற்றும் சமமான வளர்ச்சிக்காக  மன உறுதியுடன் தெலங்கானாவை உருவாக்கியவர் சோனியா காந்தி. கே.சி.ஆரின் பத்தாண்டு கால எதேச்சதிகாரத்தை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர். மக்களின் அரசாங்கம் உருவாகியுள்ளது. இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் லட்சியங்கள் நிறைவேற்றப்பட்டன.


பதவியேற்பு விழாவுக்கு சற்று முன்பு பிரகதி பவன் வெளியே உள்ள (முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம்) இரும்பு வேலிகளை உடைத்தோம். மாநில முதலமைச்சர் என்ற முறையில் நான் உறுதியளிக்கிறேன். இந்த ஆட்சியில் மக்கள்தான் பங்குதாரர்கள். நாளை காலை 10 மணிக்கு ஜோதிராவ் பூலே பிரஜா பவனில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம். நாங்கள் ஆட்சியாளர்கள் அல்ல. வேலைக்காரர்கள். நீங்கள் வழங்கிய சந்தர்ப்பத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம்" என்றார்.