கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலங்கானா மாநில அரசு அனுப்பிய வரைவு பட்ஜெட் வரைவுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளிக்காததால் அங்கு அரசியல் சாசன நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும், இன்று அரசு தயாரித்த உரையை ஆளுநர் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிகழ்த்தியதால் மத்திய - மாநில அரசு தரப்பினர் பெரு மூச்சு விட்டனர்.


பட்ஜெட் கூட்டத்தொடர்:


தெலங்கானா மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தெலங்கானாவில் சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்ற கீழவை என்ற இரு அவைகள் உள்ளன. இரு அவைகளின் கூட்டு கூட்டத்தொடரில், அரசு தயாரித்த உரையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார்.


ஆளுநருக்கும்,  முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்கும் இடையேயான உறவு  மோதல் போக்குடனே இருந்து வருகிறது. தெலங்கானா மாநில அரசு அனுப்பிய வரைவு பட்ஜெட்டுக்கு ஆளுநர் முதலில் ஒப்புதல் அளிக்காததால் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது. இது மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.


ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை:


சில தினங்களுக்கு முன், ஆளுநரின் உரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என மாநில அரசுக்கு ஆளுநர் சார்பில்  கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு, மாநில அரசு பதில் அளிக்காததால், வரைவு பட்ஜெட்டுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளிக்கவில்லை. கடந்த ஆண்டு, தெலுங்கானா அரசு பட்ஜெட் கூட்டத்தொடரை ஆளுநரின் வழக்கமான உரை இல்லாமல் நடத்தியது. முந்தைய மழைக்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படாததால், ஆளுநர் உரை தேவையில்லை என்றும் அப்போது அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதை கருத்தில் கொண்டு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை


இதையடுத்து, ஜனவரி 30 ஆம் தேதி, மாநில அரசு தெலுங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்க்குமாறு இரு தரப்பினரையும் நீதிமன்றம் கேட்டு கொண்டது. இதையடுத்து,  பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவார் என்று மாநில அரசு கூறியதால் இழுபறி முடிவுக்கு வந்தது.


ஆளுநருக்கு வரவேற்பு:


கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையிலும், இன்று  ( வெள்ளிக்கிழமை ) காலை ஆளுநரை பேரவைத் தலைவர் பி.சீனிவாஸ் ரெட்டி, முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், சட்டமேலவை தலைவர் ஜி.சுகேந்தர் ரெட்டி ஆகியோர் வரவேற்றனர். ஆளுநர், அரசு தயாரித்த உரையில் இருந்து விலகி அரசாங்கத்தை விமர்சிக்கக்கூடும் என்ற அச்சம் பி.ஆர்.எஸ் அமைச்சர்களிடையே இருந்தது. ஆனால் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அரசு தயாரிக்கப்பட்ட உரையை படித்தார்.




ஆளுநர் உரை:


விவசாயத் துறையில் முன்னேற்றம், தடையற்ற மின்சாரம், பொருளாதார மேம்பாடு, மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாடு மற்றும் தலித் அதிகாரமளித்தல் உள்ளிட்ட 47 அம்சங்கள் குறித்து ஆளுநர் பேசினார்.






தெலுங்கானா அரசாங்கத்தின் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விரிவான வளர்ச்சி நாட்டிற்கு ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது.


தெலங்கானாவின் வளர்ச்சிக்கு  மக்களின் ஆசீர்வாதம், முதலமைச்சரின் திறமையான நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகளின் கடின உழைப்பு மற்றும் அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு ஆகியவையே காரணம் என்று தமிழிசை சவுந்தரராஜன் சுட்டிக்காட்டினார்.


24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால்,  நாட்டின் பிற பகுதிகளுக்கு உணவு வழங்க முடிகிறது.


மாநிலத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான குடிநீரை குழாய்கள் மூலம் வழங்க முடிகிறது.


தெலங்கானா இன்று முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலமாக உள்ளது. ஐடி மற்றும் பிற துறைகளில் உயர்தர நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தெலங்கானா அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு ஒட்டுமொத்த நாடும் இன்று வியந்து போயுள்ளது என்று கூறிய அவர், தெலங்கானா மாநிலம் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பது மட்டுமல்லாமல், மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றாகும் என்றார்.


தெலங்கானா அரசு அறிமுகப்படுத்திய வரலாற்று சிறப்புமிக்க ரைத்து பந்து திட்டம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திட்டத்தை உலக அரங்கில் ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியது. நாட்டிலேயே 65 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.65,000 கோடியை முதலீட்டு உதவியாக வழங்கிய ஒரே மாநிலம் தெலங்கானா மட்டுமே.


ரைத்து பீமா திட்டத்தின் மூலம் மாநிலத்தின் அனைத்து விவசாயிகளுக்கும் எனது அரசு ரூ .5 லட்சம் காப்பீடு வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் முழு பிரீமியத்தையும் எல்.ஐ.சி.க்கு அரசாங்கம் செலுத்துகிறது, மேலும் ஒரு பைசா சுமை கூட விவசாயி மீது சுமத்தப்படுவதில்லை. உலகில் எந்த இடத்திலும் விவசாயிகளுக்காக இதுபோன்ற திட்டம் இல்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும்.


இறைச்சி உற்பத்தியில், நாட்டிலேயே, தெலுங்கானா ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த எட்டரை ஆண்டுகளில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில், தெலுங்கானா ரூ .3,31,000 கோடி முதலீடுகளை ஈர்க்க முடிந்தது" என்று ஆளுநர் கூறினார்.