பிரபல மலையாள தொலைக்காட்சி நடிகை ஸ்ருதி ரஜினிகாந்த், தான்  மன அழுத்தத்தில் இருப்பதாகவும், சிரித்து பல வாரங்கள் ஆனதாகவும் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கேரள மாநிலம் அம்பலப்புழாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஸ்ருதி ரஜினிகாந்த் ஃப்ளவர்ஸ் டிவியில் ஒளிபரப்பான “சக்கப்பழம்” என்ற தொடரின் மூலம் புகழ்பெற்றார். முன்னதாக 2001 ஆம் ஆண்டு ஒளிபரப்பான உன்னிக்குடன், மானசபுத்ரி, எட்டு சுந்தரிகளும் ஞானும் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். 


இதுதொடர்பாக ஜோஷ் டாக்ஸ் சேனலில் ஸ்ருதி மனச்சோர்வை சமாளிப்பது பற்றி பேசியுள்ளார்.அந்த வீடியோவில், என்னால்  நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை, இதை எப்படி விளக்குவது என்றும் தெரியவில்லை. சிலருக்கு நம் நிலைமை என்னவென்று தெரியாமல் இருக்கும். அதைச் சொன்னாலும் அவர்களுக்குப் புரியாது. என்னதான் வேலை செய்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டாலும் தூக்கம் வராது. ஒவ்வொரு விஷயமும் இப்படித்தான் சிந்திக்கப்படுகிறது. இதனை நினைத்து  நான் முதலில் மிகவும் அழுதேன். என்னால் இப்போது அழவும் முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த பிரச்சினையை நான் மட்டும் அனுபவிக்கவில்லை. என் தலைமுறையில் உள்ள நிறைய பேர் இதனை அனுபவித்து இருக்கிறார்கள். இப்படித்தான் ஒருநாள் இன்ஸ்டாகிராம் செயலியில் யாராவது மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்களா என்று ஒரு கேள்வி வந்தது. அதற்கு பயனாளர்கள் கொடுத்த பதிலால் இன்ஸ்டாகிராம் நிரம்பி வழிந்தது என்றே சொல்லலாம். யாரும் மகிழ்ச்சியாக இல்லை. ஏன் எல்லோரும் முகமூடி அணிந்து வாழ்கிறார்கள்? என தெரியவில்லை. நீங்கள் சரியில்லை என்று ஒருவரிடம் சொல்வதை இயல்பாக்க முயற்சிப்போம். எனவும் ஸ்ருதி கூறியுள்ளார். 


தொடர்ந்து, உங்கள் மனதானது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம். எவ்வளவு பணம் இருந்தாலும், நீங்கள் விரும்பும் நபர்களுடன் சிறிது நேரம் செலவழிக்க முடியாமல் போனாலோ, அல்லது நீங்கள் விரும்பும் வேலையை அனுபவிக்க முடியாவிட்டாலோ நீங்கள் என்ன செய்ய முடியும்? என சிந்தித்து பாருங்கள். கையில் ஐந்து பைசா இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக வாழ்வது அதிர்ஷ்டம் என ஸ்ருதி ரஜினிகாந்த் கூறியுள்ளார். 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு தொடர் மன அழுத்தம்/ மனச்சோர்வு ஏற்பட்டால் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)