கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத்தில், இம்முறை சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. நாளை மறுநாள் மற்றும் டிசம்பர் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதை தொடர்ந்து, டிசம்பர் 8ஆம் தேதி, இமாச்சலப் பிரதேசத்துடன் இணைத்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ், ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி, ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்னும் தனியார் அமைப்பு ஆய்வு செய்தது. அதில், வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் மற்றும் கல்வித்தகுதி தொடர்பான பல்வேறு சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.661 கோடி சொத்துக்களை கொண்ட வேட்பாளர்:
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குஜராத் சட்டசபை தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள 1,621 பேரில் 456 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் ஆவர். அதில் பாஜகவை சேர்ந்த 154 வேட்பாளர்களும், காங்கிரசை சேர்ந்த 142 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த 68 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள் என தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பாஜகவை சேர்ந்த ஜெயந்தி படேல் என்ற வேட்பாளர், ரூ.661 கோடி என்ற சொத்த மதிப்புடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதோடு, தனக்கு ரூ.233 கோடி கடன் உள்ளதாகவும் தன்னுடைய வேட்பு மனுவில் ஜெயந்தி படேல் குறிப்பிட்டுள்ளார். வேட்பாளர்களின் அதிகபட்ச சொத்து மதிப்பு பட்டியலில், ரூ.372 கோடி சொத்துக்களுடன் பாஜகவை சேர்ந்த பல்வந்த் ராஜ்புத் இரண்டாவது இடத்திலும், ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் அஜித்சிங் தாக்கூர் ரூ.342 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
சராசரி சொத்து மதிப்பு:
போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.56 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. 6 வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான மதிப்பிலான சொத்துகளே தங்களிடம் உள்ளதாக பதிவு செய்துள்ளனர். 6 வேட்பாளர்கள் தங்களிடம் எவ்வித சொத்துக்களும் இல்லை என்று தங்களது வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர்.
கல்வி விவரம்:
குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 449 பேர் பட்டதாரிகள் ஆவர். அதேநேரம், 42 வேட்பாளர்கள் பள்ளிக் கூடம் பக்கமே போகவில்லை என்று தெரியவந்துள்ளது. அதாவது தாங்கள் கல்வி கற்கவில்லை என வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர். 85 பேர் 5-ம் வகுப்பு வரை கல்வி பயின்று உள்ளனர். வேட்பாளர்களில் 997 பேர் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வி பயின்றுள்ளனர். ஆய்வு செய்யப்பட்ட 1,621 பேரின் வேட்புமனுக்களில், 449 வேட்பாளர்கள் மட்டுமே கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றுள்ளனர் என, ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.