Telagana : தெலங்கானாவில் சுவாமி ஐயப்பனுக்கு எதிராக அவதூறு கருத்தை ஒருவர் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது.



ஐயப்பன் குறித்து அவதூறு கருத்து


தெலங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் பொது கூட்டத்தில் நரேஷ் பைரி என்பவர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் சுவாமி ஐயப்பனுக்கு எதிராக அவதூறு கருத்துகளை பேசியதாக கூறப்படுகிறது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






இதனால் நரேஷ் பைரி மீது பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது, " இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கிலும், கேலி செய்யும் வகையிலும் அவர் பேசியுள்ளார். அய்யப்ப தீட்சை எடுத்த பக்தர்களை புண்படுத்தும் நோக்குடன் பேசியதாகவும் தெரிகிறது என புகாரில் தெரிவித்துள்ளார். மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசிய நரேஷ் பைரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


மதம் அல்லது மத நம்பிக்கைகளை புண்புடுத்தும் செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நரேஷ் பைரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள நரேஷ் பைரியை போலீசார் தேடி வருகின்றனர். 


போராட்டம்


இதனை அடுத்து, நரேஷ் பைரி மீது நடவடிக்கை எடுக்க கோரி தெலங்கானாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
இந்து  கடவுள்களை அவமரியாதை செய்ததற்காகவும், ஐயப்ப சுவாமி பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகவும் நரேஷ் பைரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விகாராபாத்தில் உள்ள பரிகி காவல் நிலையத்துக்கு வெளியே பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அடிலாபாத் மாவட்டம் இச்சோடா பகுதியிலும் ஐயப்ப சுவாமி பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


கண்டனம்


இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பாண்டி சஞ்சய், தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.






அதில் குறிப்பிட்டிருப்பதாவது, " ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடவுள்களை அவமதித்ததற்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியுள்ள நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.