Watch Video: தெலங்கானாவில் தொலைக்காட்சி நேரலை விவாதத்தின்போது பி.ஆர்.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர், பாஜக வேட்பாளரின் கழுத்தை பிடித்து நெரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூடுபிடித்த தேர்தல் களம்:
அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக, அடுத்தடுத்து நடைபெற உள்ள 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக தென்மாநிலத்தில் இடம்பெற்றுள்ள தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் அதிக கவனம் ஈர்த்துள்ளது.
நவம்பர் 30ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பிஆர்எஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதேநேரம், பாஜக மற்றும் அசாதுதின் ஓவைசியின் AIMIM ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். சில தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரங்களும் நடைபெற்று வருகிறது.
வைரல் வீடியோ:
இப்படியான நிலையில், தேர்தல் தொடர்பாக ஹைதராபாத்தில் தெலுங்கு செய்தி தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விவாத நிகழ்ச்சி லைவாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் குத்புல்லாபூர் தொகுதி எம்.எல்.ஏ விவேகானந்த் மற்றும் பாஜக வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுடாவும் பங்கேற்றனர். அப்போது, இவர்களுக்கு இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. விவாதத்தில் இரண்டு பேரும் அவர்களது கருத்தை முன்வைத்து நீண்ட நேரமாக பேசிக் கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் பாஜக வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுடா ஒரு கருத்தை சொன்னார்.
இந்த கருத்தால் எம்எல்ஏ விவகானந்த் உடன்பாடு இல்லாமல் கடும் ஆத்திரம் அடைந்தார். இதற்கு பிறகு, கையில் இருந்த மைக்கை ஸ்டாண்டில் வைத்துவிட்டு, பாஜக வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுடாவை தாக்கினார். தாக்கியதோடு இல்லாமல் பாஜக வேட்பாளரின் கழுத்தை பிடித்து நெரித்திருக்கிறார். பின்னர், போலீசாரும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் அங்கு விரைந்து வந்து இருவரையும் விலக்கி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைராகி வருகிறது.
சட்டப்போராட்டம்:
இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷண் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”பொது இடத்தில் பாஜக வேட்பாளரை தாக்கியது அதிர்ச்சி அளிக்கிறது. பிஆர்எஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதாரண மக்கள் கூட இதுபோன்று தாக்கப்படுவார்கள். எனவே, சம்பந்தப்பட்ட பிஆர்எஸ் எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் பாஜக சட்டப்போராட்டம் நடத்தும்" என்று தெரிவித்திருந்தார்.