புல்வாமா தாக்குதல், ஜம்மு காஷ்மீரின் நிலைமை, அதானி மற்றும் அரசியலில் தனது ஆரம்ப கால பயணம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து, ராகுல் காந்தியுடன் பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்கை சந்தித்த வீடியோவைப் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். முன்னதாக 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு அரசின் தவறே காரணம் என்று சத்யபால் மாலிக் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியுடனான பேட்டியிலும் அதையே மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.






இது குறித்து பேசிய அவர், "இது எங்கள் தவறு என்று நான் இரண்டு தொலைக்காட்சிகளுக்கு  பேட்டியளித்துள்ளேன். ஆனால் இதை எங்கும் சொல்ல வேண்டாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டனர். எனது அறிக்கைகள் விசாரணையை பாதிக்கலாம் என்று நான் நினைத்தேன், ஆனால் புல்வாமா தாக்குதல் தொடர்பாக விசாரணையே நடத்தப்படவில்லை. அது தேர்தல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி தனது உரையை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டார்" என குறிப்பிட்டுள்ளார்.


மேலும், “ இந்த புல்வாமா தாக்குதல் ஏன் நடந்தது? மத்திய பாதுகாப்பு படையினர் 5 விமானங்களை கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். என்னிடம் கேட்டிருந்தால் நான் அதை வழங்கியிருப்பேன். டெல்லியில் விமானங்களை பெறுவது மிகவும் எளிதான ஒரு விஷயம் ஆனால் பாதுகாப்பு படையினர் அனுப்பிய கடிதம் 4 மாதங்கள் உள் துறை அமைச்சகத்தில் கிடப்பில் இருந்தது, பின் அது நிராகரிக்கப்பட்டது.


இதன் காரணமாக பாதுகாப்பு படையினர் ஆபத்து நிறைந்த சாலையை பயன்படுத்த நேரிட்டது.  சிஆர்பிஎஃப் வாகனத்தைத் தாக்கிய வெடிகுண்டு ஏற்றப்பட்ட டிரக் சுமார் 10-12 நாட்களாக அந்தப் பகுதியில் சுற்றி வந்துள்ளது. அந்த வெடிபொருட்கள் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டவை. வாகன ஓட்டி மற்றும் வாகன உரிமையாளர் மீது பயங்கரவாத செயல்கள் தொடர்பாக புகார்கள் பதிவாகி இருந்தன. இருப்பினும் அவர்களை பலமுறை கைது செய்து விடுவித்துள்ளனர். அவர்கள் உளவுத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்படவில்லை” என குறிப்பிட்டு பேசினார்.


மோடியை நீக்காவிட்டால் விவசாயத்தை அழிப்பார்:


புல்வாமா சம்பவத்தைத் தவிர, விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய முன்னாள் ஆளுநர், விவசாயச் சட்டம் ரத்து செய்யப்பட்டபோது குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்தது, ஆனால் இன்னும் அது செயல்படவில்லை என்று தெரிவித்தார். அதானி பெரிய குடோன்களைக் கட்டி பயிர்களை நிர்ணயித்த விலைக்கு வாங்கிய காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும், அடுத்த ஆண்டு அவற்றின் விலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  “இந்த முறை (2024ல்) மோடியை நீக்காவிட்டால், அவர் விவசாயத்தை அழித்து விடுவார், அவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்றுவிடுவார். அதுதான் அவர்களின் எண்ணம்,” என்று கூறிய முன்னாள் ஆளுநர், “அப்படி தான் அக்னிவீர் (திட்டம்) கொண்டு இராணுவத்தை முடித்து கட்டினார்” என தெரிவித்துள்ளார்.