பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, பீகார் முதலமைச்சராக 10-வது முறையாக இன்று நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், அவருக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், புதிய அரசு பொறுப்புடன் செயல்பட்டு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நம்புவதாக கூறியுள்ளார். அவரது பதிவின் முழு விவரங்களை காண்போம்.

Continues below advertisement


தேஜஸ்வி யாதவின் பதிவு என்ன.?



இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள தேஜஸ்வி யாதவ், “பீகார் முதலமைச்சராக பதவியேற்ற மதிப்பிற்குரிய ஸ்ரீ நிதிஷ் குமார் ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பீகார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


புதிய அரசாங்கம் பொறுப்புள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், அதன் வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகளை நிறைவேற்றும், பீகார் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் தரமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.“ என கூறியுள்ளார்.


பீகார் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி



நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 202 இடங்களை கைப்பற்றி, பாஜக- ஜெடியு-வின் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆர்ஜேடி-யின் மகாகட்பந்தன் கூட்டணி, 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதில் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றது.


இந்நிலையில், பீகார் முதலமைச்சராக 10-வது முறையாக இன்று நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் தேர்தலுக்கு பின் முதல் முறையாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.



எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ்



இதனிடையே, பீகாரில் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க, குறைந்தது 10 சதவீத தொகுதிகளை கைப்பற்றி இருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில், காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில்  மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது.


இந்த எண்ணிக்கை, மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், 10 சதவீததிற்கும் அதிகம் ஆகும். அதனால், கடந்த ஆட்சிக் காலத்தை போலாவே, தேஜஸ்வி யாதவ் பீகார் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். பீகார் தேர்தலில், ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று தேஜஸ்வி யாதவ் எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.