சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாடுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. "அவர் ஒரு பெண் மற்றும் மற்ற குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி, அவர்களின் தகுதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறது" என்று தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தனது உத்தரவில் கூறினார். இந்த இடைக்கால ஜாமீனை அடுத்து அவர் 3 மாதங்களுக்குப் பின்னர் விடுதலையாகி உள்ளார்.
யார் இந்த டீஸ்டா?
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரங்கள் மறப்பதற்கில்லை. குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தை நிகழ்த்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அதிகமாகப் போராடியவை மனித உரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான். அப்படி குஜராத்தில் போராடி வருபவர்களுள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizen for Justice and Peace) அமைப்பின் சார்பில் செயல்படுபவர் தான் இந்த டீஸ்டா.
பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய டீஸ்டா செடல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலான எம்.சி. செடல்வாடின் பேத்தி. வழக்கறிஞர் அதுல் செடல்வாட், சீதா செடல்வாடின் மகள். மும்பையில் தி டெய்லி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் இந்தியா ஆகியவற்றில் பணிபுரிந்தார். ஆனால், 1993 மும்பை மதக் கலவரம் அவரது வாழ்க்கை மாறியது. அதன் பிறகு முழுநேர மனித உரிமை செயற்பாட்டாளராக மாறினார்.
இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அந்த வழக்குகளில் மக்களைக் கைது செய்ய போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறி முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் டீஸ்தா செடல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் ஜூன் 25-ம் தேதி கைது செய்தனர்.
இதனிடையே, டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி கண்டனம் தெரிவித்தது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் டீஸ்தா செடல்வாட் மட்டும் ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர். இந்நிலையில் அவர்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
கலவர வழக்கு முடித்துவைப்பு:
2002 குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு இழப்பீடு கோரிய மனு உள்ளிட்ட வழக்குகள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டதாக கூறி வழக்குகளை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாடுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.