சண்டிகரில் கார்மேல் கான்வென்ட் பள்ளியில் 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரம் விழுந்ததில் 15 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார். அதுமட்டுமின்றி, 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில், ஒரு மாணவர், செக்டார் 9 பள்ளியில் பேருந்து நடத்துனராக பணிபுரியும் ஒரு பெண் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் புகழ்பெற்ற பிஜிஐஎம்இஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 18 பேர், ஆபத்தான நிலையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், 9-16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஆவர். மதிய உணவு நேரத்தில் குழந்தைகள் மரத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மரம் விழுந்ததாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரம் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நிர்வாகம் எப்படி கவனிக்காமல் விட்டுவிட்டது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு - தோட்டக்கலை மற்றும் வனத் துறைகளைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரியின் உதவியுடன் - ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று துணை ஆணையர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் மரங்களை ஆய்வு செய்ய மாநகராட்சி குழு பள்ளிக்கு சென்றுள்ளது.
யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தணிக்கை நடத்த உள்ளூர் குழந்தைகள் உரிமைக் குழுவுக்கு அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சீமா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்