சாதி, மதம், இனம் கண்டு மனிதனை அடையாளம் காணக்கூடாது, அனைவரும் சமம் என்ற அடிப்படை கருத்தினை மாணவர்களுக்கு உணர்த்துவதே கல்வி நிலையங்களின் தலையாய கடமை. ஆனால், அந்த பணியில் இருந்து கல்வி கட்டமைப்பு தடம்மாறுகிறதோ என்ற சந்தேகத்தை அண்மைக்கால நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றன.  பாஜக ஆட்சி அமைந்தது முதல் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பல வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். கர்நாடகவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து , மாணவர்கள் தோளில் காவி துண்டு அணிந்து வந்தது தேசிய அளவில் பேசுபொருளானது.


மாணவரை தீவிரவாதி என்ற பேராசிரியர்:


இந்நிலையில் தான், கல்லூரி பேராசிரியர் ஒருவர் வகுப்பறையில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மாணவரை,  தீவிரவாதி என கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. , 45 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கவனித்து வருகின்றனர். அப்போது வகுப்பில் பாடம் எடுத்து கொண்டிருந்த பேராசிரியர், கடைசி பென்ச்சில் நீல நிற சட்டை அணிந்து அமர்ந்துள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவரை, நீ முஸ்லிம் எனவே நீ ஒரு  தீவிரவாதி என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்.






சரமாரியாக கேள்விகளை கேட்ட மாணவர்:


இதனால் ஆவேசமடைந்த மாணவர் சக மாணவர்களுக்கு முன்னாள் என்னை நீங்கள் எப்படி இவ்வாறு அழைக்கலாம். இது வகுப்பறை நீங்கள் ஒரு ஆசிரியர், இப்படி பேசலாமா என அடுத்தடுத்து கேள்வி எழுப்பியுள்ளார். உடனடியாக சுதாரித்த பேராசிரியர், நீ சிறுவன் எனது மகன் போன்றவன். எனவே ஜாலியாகத்தான் அப்படி அழைத்தேன் என கூறியுள்ளார். ஆனால் கோபம் குறையாத அந்த மாணவன்,  இது எப்படி ஜாலியாகும். உங்கள் மகனை இப்படி தான் பேசுவீர்களா, இல்லை தீவிரவாதி என அழைப்பீர்களா. ஒரு முஸ்லிமாக நாள்தோறும் இப்படிதான் நான் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறேன். ஒருவரின் பெயரை வைத்து எப்படி தீவிரவாதி என்று கூறுவீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.


மன்னிப்பு கோரிய பேராசிரியர்:


செய்வதறியாமல் திகைத்த பேராசிரியர் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். நீங்கள் மன்னிப்பு கேட்பதால் எதுவும் மாறாது. நீங்கள் எப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர் என்பதை தான் உங்களது பேச்சு பிரதிபலிக்கிறது என்று மாணவர் தெரிவித்தார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள யுனெஸ்கோ பிரதிநிதியான பேராசிரியர் அஷோக் ஸ்வையின், இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பவர்கள் எதிர்கொள்வது இதுதான் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மணிப்பாலில் உள்ள மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.


பேராசிரியர் மீது நடவடிக்கை:


பேராசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விசாரணை முடியும் வரை அந்த பேராசிரியர் பாடம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேராசிரியர் மீது தான் எந்தவித புகாரும் வழங்கப்போவதில்லை என பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார். யாரோ சிலர் செய்யும் தவறுக்கு ஒரு சமூகத்தையே குற்றம்சாட்டுவது சரியா என, அந்த பேராசிரியருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


தற்போது அவர் மீதான நடவடிக்கை விசாரணையை தொடங்கியுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது