அரபி கடல் பகுதியில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இதற்கு 'டவுடே' புயல் என்று பெயர் வைக்கப்பட்டது. இது லச்சதீவுகளுக்கு அருகே உருவாகி இருந்ததால் மேற்கு கடலோர பகுதிகளில் தீவிர மழை பொழிந்தது. குறிப்பாக கேரளாவில் அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓட தொடங்கியது. மேலும் தென் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மழையை ஓட்டியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தப் புயல் தீவிர புயலாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் வடக்கு மற்றும் வடமேற்கு தீசையில் நகர்ந்து குஜராத் அல்லது டியூ பகுதியில் வரும் 18ஆம் தேதி கரையை கடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டவுடே புயலால் அடுத்த மூன்று நாட்களுக்கு லச்சதீவு மற்றும் கேரளா பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மற்றும் கேரளா ஒட்டிய பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கோவா, குஜராத் உள்ளிட்ட பகுதிகளிலும் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரபி கடல் பகுதியில் காற்றின் வேகமும் மணிக்கு 60-80 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 18ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் அரபி கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக கப்பல் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை பகுதிகளில் நிவாரண உதவிகளை கப்பல் படை தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற இந்திய கப்பல் படை தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளது. கேரளாவில் இதுவரை மழை பாதிப்பு காரணமாக 308 பேர் மீட்கப்பட்டு நிவாரண இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை மேலும் தீவிரம் அடையும் என்பதால் கேரளா அரசு நிவாரண பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை இருக்கும் என்பதால் அப்பகுதி மீனவர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஏற்கனவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக தாக்டே மழை தரும் என்றே தெரிகிறது.