கேரள சட்டபேரவை தேர்தல் முடிந்த நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக  வென்ற வழக்கறிஞர் A.ராஜா தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டார். கேரள எல்லையில் தேனி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதிகள்தான் தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை ஆகியவை, தமிழர்கள் நிறைந்த பகுதியான இதில் பெரும்பாலும் தமிழர்கள்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர். கேரளாவில் உள்ள 140 எம்.எல்.ஏக்களில் ஒரே தமிழர் A.ராஜா தான். ராஜா தமிழில் பதவியேற்றுக் கொண்டது பெருமைதான் என்றாலும் ராஜாவுக்கு அமைச்சர் பதவி என்பது கனவிலும் நடக்காது என்பதுதான் கேரள அரசியலின் எதார்த்தம்.



 


கேரளாவை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்து வரும் நிலையில் இந்த இரண்டு கட்சிகளும் தேவிகுளம் தொகுதியில் தமிழர் ஒருவரை அதிகபட்சமாக மூன்றுமுறை வரை நிற்கவைப்பார்கள். அதற்கு மேல் அவர்களுக்கு வாய்ப்பு இருக்காது. ஏனென்றால் நான்கு முறை வெற்றி பெற்றுவிட்டால் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய நெருக்கடி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏற்படும் இதனை தவிர்க்கவே மூன்று முறைக்குமேல் வென்றவர்களை தேவிகுளம் தொகுதியில் நிறுத்தமாட்டார்கள்



அதற்கு உதாரணமாக நடந்து முடிந்த தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தவர் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த எஸ்.ராஜேந்திரன். இந்த சட்டமன்ற தேர்தலிலும் எஸ்.ராஜேந்திரன் வெற்றி பெற்றால் அவருக்கு அமைச்சரவையில் இடம்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனை தவிர்க்கவே அத்தொகுதியில் எஸ்.ராஜேந்திரனுக்கு மாற்றாக இளைஞரான ராஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அவரும் வெற்றி பெற்றுள்ளார். கேரளாவை பொருத்தவரை தமிழர்கள் எம்.எல்.ஏக்கள் ஆவார்கள், தமிழிலும் பதவியேற்பார்கள் ஆனால் ஒருபோதும் அமைச்சராக மாட்டார்கள் காரணம் அவர்கள் தமிழர்கள் எனக் கூறப்படுகிறது.