Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 22 ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 04 Jun 2021 08:01 PM
தமிழ்நாட்டில் 22 ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 22 ஆயிரத்து 651 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 1,971 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 33 ஆயிரத்து 646 நபர்கள் கொரோனாவால் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 463 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துளளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 26 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.

கேரளா கொரோனா நிலவரம்

கேரள மாநிலம் 16,229 புதிய கொரோனா பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 135 பேர் இறந்துள்ளனர். அந்த மாநிலத்தில் இதுவரை சிகிச்சை பெற்றுவருபவர்கள் மொத்தம் 1,74,526.

கோவின் தளத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு : எழும் கண்டனக் குரல்கள்

இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட 9 மாநில மொழிகளை மத்திய அரசு இன்று புதியதாக இணைத்துள்ளது. ஆனால், இவற்றில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த செயலுக்கு ராமதாஸ், சு.வெங்கடேசன் போன்ற அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கோவின் இணையதளத்தில் தமிழ் புறக்கணிப்பு

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மத்திய அரசு கோவின் என்ற இணையதளத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளத்தில் தினசரி ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட 9 மாநில மொழிகளை மத்திய அரசு இன்று புதியதாக இணைத்துள்ளது. ஆனால், இவற்றில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அனைத்து கைதிகளுக்கும் விரைவில் தடுப்பூசி - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு தடுப்பு பணிகளை மாநில அரசு மேறகொண்டு வருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி மாவட்டச் சிறையில் கைதிகளுக்கு தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாட்டில் சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும் என்று கூறினார்.

வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா

உலகளவில் கொரோனா பாதிப்பு மனிதர்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் மிக கடுமையாக பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் மனிதர்கள் மட்டுமின்றி பல நாடுகளில் விலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், கொரோனா வைரசின் தாக்கத்திற்கு வண்டலூர் உயிரியியல் பூங்காவும் தற்போது ஆளாகியுள்ளது. சென்னையின் முக்கியமான சுற்றுலாத்தளமாக விளங்கும் வண்டலூர் உயிரியியல் பூங்காவில் சிங்கங்கள், புலி, மான், கரடி, உள்ளிட்ட பல உயிரினங்கள் உள்ளது. இந்த நிலையில், இந்த பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டனில் வேகமாக பரவிவரும் `டெல்டா' கொரோனா

இந்தியாவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள அதிக வீரயம் மிக்க கொரோனா வைரசுக்கு டெல்டா என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு கொரோனா தொற்று ஏற்பட்ட 12 ஆயிரம் நபர்களில் 5 ஆயிரத்து 472 நபர்களுக்கு டெல்டா வகை கொரோனா பரவியிருப்பது தெரியவந்துள்ளது.  

திருவள்ளூர் மாவட்டத்தில் இலவச ஆட்டோ சேவை

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் இலவச ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.


இலவச ஆட்டோ சேவையை பெற:  7200045740, 9382977911, 9940270037, 9444115773, 9884465 348, 9443248799, 7338913972  என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் குறைந்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில், வேலூரில் இன்று ஆய்வு மேற்கொண்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிரந்தரமான ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும், உள்கட்டமைப்பு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.

மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தேவை

தமிழ்நாட்டில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தேவை என்று மருத்துவ குழு முதல்வருக்கு பரிந்துரை அளித்துள்ளது.


தமிழ்நாட்டில், தற்போது அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 7ம் தேதியுடன் முடிவடைகிறது.      

இராமநாதபுரம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண உதவி

இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய பகுதியில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு கேணிக்கரை காவல் நிலையம் சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை ஆய்வாளர் மலைச்சாமி வழங்கினார். 

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையில் அதிகாரிகள் ஆய்வு

பாரத் பயோடெக் அதிகாரிகளுடன் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது  செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். 


 

மூன்றாவது அலை - அமெரிக்காவிடம் இருந்து கற்க வேண்டியது என்ன?

தடுப்பூசி இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி அமெரிக்காவில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் நான்காவது அலையில் அந்த தேசம் இறப்புகளைக் குறைத்திருக்கிறது. இதையே நாமும் கடைபிடித்து மூன்றாவது அலையில் நமது பக்க இழப்புகளை குறைக்க வேண்டும் என மருத்துவர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.  


மூன்றாவது அலை - அமெரிக்காவிடம் இருந்து கற்க வேண்டியது என்ன?

இரண்டாவது அலையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் வட்டிவீதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அறிவித்தார். எனவே, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி வீதம் நான்கு சதவீதம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று குறைந்த இடங்களில் தளர்வுகள் இருக்கலாம் - நிபுணர்கள் கருத்து

தமிழகத்தின் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம்  மாவட்டம் வாரியாக வேறுபடுவதால் மாநிலம் முழுவதும் ஒரேமாதிரியான கட்டுப்பாடு நடவடிக்கைகள் தேவையற்று என தொற்றுநோயியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.     

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி .10 லட்சம் கொடுத்தார்.

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், அவரது மகள் வெண்ணிலா - மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

Tiruvannamalai Covid-19 Vaccination News Updates: 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக போடப்படும்

திருவண்ணாமலை மாவட்டம்


1.நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தேரடி வீதி


2.சண்முகா தொழிற்சாலை ஆண்கள் பள்ளி, செங்கம் ரோடு


3. லெபனான் பில்டிங், வேட்டவலம் ரோடு (தனபாக்கியம் மருத்துவமனை எதிரில்)


முகாம் செயல்படும் நேரம் காலை 9.00 மணி முதல் மாலை 4 மணி வரை


ஆகிய இடங்களில் நாள்தோறும் கோவிட் 19 தடுப்பூசிகளான கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்தார்.    

கோயம்பேடு வணிக வளாகத்தில் கொரோனா நெறிமுறைகள் கண்காணிக்கப்படும்

கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகளுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதலின் அவசியம், வியாபாரத்தின் போது முகக்கவசம் அணிதல், எல்லா இடங்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்  தலைமையில் நேற்று நடைபெற்றது. 

TamilNadu Covid-19 Death News: கொரோனாவுக்கு பலியாகும் இளைஞர்கள்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த  23 வயதான இளைஞர் ஒருவர்  கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளார். கடந்த மாதம் 21ம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மே, 30 அன்று இவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் ஜூன் 2ம் தேதி கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானதாக அரசு வெளியிட்ட கொரோனா செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 


 




மேலும், ராணிப்பேட்டை  மாவட்டத்தில் கடந்த மாதம் 15ம் தேதி கொரோனா அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர், கடந்த ஜூன் 1ம் தேதி கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார். கொரோனா அறிகுறிகள் (காய்ச்சல், இருமல்) வந்த 6 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.       


உயரிழந்த இருவருக்கும், ரத்த அழுத்தம், இருதய நோய், நுரையீரல் பாதிப்பு போன்ற எந்த இணை நோய்களும் இல்லாதவர்கள்.            

30,002 கொரோனா படுக்கைகள் காலியாக உள்ளன

சமீபத்திய தரவுகளின் படி, தமிழ்நாட்டில் 30,002 கொரோனா படுக்கைகள் காலியாக உள்ளன. சென்னையில் 261 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும், 4560 ஆக்சிஜன் வசதிக் கொண்ட படுக்கைகளும் காலியாக   உள்ளன. 


 



 

தென்னிந்தியாவில் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

கோயம்பத்தூர்(தமிழ்நாடு), கிழக்கு கோதாவரி (ஆந்திரா ),மலப்புரம்(கேரளா), பெங்களூர் (கர்நாடகா) , சித்தூர் (ஆந்திரா)   ஆகிய மாவட்டங்களில் கொரோனா வராந்திர பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 


 



   

கொரோனா இறப்பு எண்ணிக்கை 25,665 ஆக அதிகரித்துள்ளது

 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 460 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில்  மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 25,665 ஆக அதிகரித்துள்ளது.  


சென்னை, செங்கல்பட்டு, கோயம்பத்தூர், திருவள்ளூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்கள், மாநிலத்தின் 51 சதவீத கொரோனா இறப்புகளுக்கு காரணமாக உள்ளன.








































மாவட்டம் மொத்த இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரம் 
சென்னை 7,29169
செங்கல்பட்டு1,97349
திருவள்ளூர்1,44417
கோயம்பத்தூர்1,39449
சேலம்1,04433
   

 

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமயின் கீழ் கொரோனா இரண்டாவது தாக்குதலை இந்தியா கட்டுப்படுத்தியது

மிகவும் குறுகிய காலத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் இரண்டாவது தாக்குதலை இந்தியா கட்டுப்படுத்தியாக    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் திறமை மிகுந்த தலைமை இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார். 


137 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணம் என்றும் குறிப்பிட்டார். 

Background

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்,  புதிதாக தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை 24,405 ஆக உள்ளது. 32,221 பேர் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை  2,80,426 ஆக குறைந்துள்ளது. சென்னையில் தற்போது 28,186 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.