ஜி 20 உச்சி மாநாடு இந்தோனேசியா பாலி நகரில் கடந்த நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாடு நிறைவு விழாவில் ஜி20 தலைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. டிசம்பர் 1-ம் தேதி முதல் ஜி20 தலைவர் பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது.
ஜி20 மாநாடு:
இந்தநிலையில், அடுத்த ஓராண்டில் ஜி20 மாநாட்டில் செயல்படவேண்டிய கூட்டு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டம் வருகின்ற டிசம்பர் 5 ம் தேதி டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற இருக்கிறது.
இதையடுத்து, ஜி20 கூட்டங்களுக்கான இந்தியாவின் தயாரிப்புகள் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவிக்க டிசம்பர் 5 ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய 40 கட்சிகளின் தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்:
ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கலந்து கொள்வார் என்ற தகவலும் வெளியாகிறது. புதுதில்லியில் அடுத்த ஆண்டு இந்தியாவில் ஜி20தலைவர்கள் உச்சி மாநாடானது செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஜி20 கூட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும்.
இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக கட்சி தலைவருமான முக ஸ்டாலின், ஜி20 உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் பங்கேற்க டிசம்பர் 5 ஆம் தேதி தேசிய தலைநகர் டெல்லிக்கு செல்ல இருக்கிறார். மேலும் இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநில தலைவர்கள் கலந்துகொண்டு தங்கள் மாநிலங்களுக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைக்க இருப்பதாகவும் தெரிகிறது.
2023 ஜி20 மாநாட்டில் முன்னேற்பாடு தொடர்பான பிரதமர் மோடியின் கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்கிறார். டிசம்பர் 4ம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் முக ஸ்டாலின் 5 ம் தேதி பிரதமரின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழகம் நலன்சார்ந்த கோரிக்கைகளையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்பார்க்கப்படும் கோரிக்கைகள்:
- 15வது நிதிக்குழுவில் நமக்கு வரவேண்டிய 2,600 கோடி ரூபாய் மானியம்.
- சென்னை வெள்ளத்தில் இருந்து தப்பிக்க 500 கோடி பரிந்துரை செய்யப்பட்ட நிதி
- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை
போன்ற கோரிக்கைகள் முன்வைக்க படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி20 மாநாடு:
ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
தலைமைப் பொறுப்பில் இந்தியா:
ஓர் ஆண்டு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, உலகளாவிய பிரச்சினைகளான பருவநிலை மாறுபாடு, தீவிரவாதப் பிரச்சினை, கடன்பிரச்சினை, கொரோனா தாக்கம், உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண முயலும். வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட படத்தில் ஜி 20 லோகோவில் தாமரை சேர்க்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக இந்த இலச்சினை இந்திய தேசியக் கொடியின் 4 நிறங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பூமி தாமரை மீது அமர்ந்திருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 7 இதழ்களும் உலகின் 7 கண்டங்களும் ஜி20 மாநாட்டில் ஒன்றிணைவதை குறிக்கிறது. இதில் உள்ள பூமி, இந்தியாவின் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் கொள்கையைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜி 20 மாநாட்டின் பிரதான குறிக்கோளாக பெண்கள் தலைமையிலான வளர்ச்சியைப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.