தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை:


கனமழை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் வடக்கு கேரளா-கர்நாடகா கடற்கரையில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது


தமிழகத்தில் மாண்டஸ் புயல் உருவாகி சனிக்கிழமை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதி கன மழை முதல் மிக கன மழை பெய்தது. புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.


இந்நிலையில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் சின்னமாக வலுப்பெறும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புயலாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்தால் மீண்டும் கன மழை பெய்யக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் சின்னமாக உருவாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


மேலும் வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,


13.12.2022 மற்றும் 14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில     இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.


15.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.


அதேநேரம், மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், இன்று இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


இன்று:   லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


14.12.2022 மற்றும் 15.12.2022: தென்கிழக்கு  மற்றும்  அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.