அருங்காட்சியகங்களை நவீனமயமாக்குவதற்காக அதிக நிதி உதவி பெறும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த பதில் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
அருங்காட்சியகங்களை நவீனமயமாக்குவது:
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், "மண்டல, மாநில, மாவட்ட அளவில் மத்திய அரசு, மாநில அரசுகள், சங்கங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைகள் ஆகியவற்றால் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்க இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படுகிறது.
தற்போதுள்ள அருங்காட்சியகங்களை வலுப்படுத்துதல், நவீனப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் உதவிகள் செய்யப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ள கலைப் பொருட்களை டிஜிட்டல் மயமாக்கி, அவை தொடர்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், அருங்காட்சியக வல்லுநர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கும் இந்த உதவி வழங்கப்படுகிறது.
அதிக நிதி பெறும் மாநிலங்கள்:
கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2019-2024 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அருங்காட்சியக மானிய உதவித் திட்டத்தின் கீழ் அதிகபட்ச நிதியுதவி பெற்ற முதல் 10 மாநிலங்கள்:
1. மிசோரம்
2. மத்தியப் பிரதேசம்
3. ஆந்திரப் பிரதேசம்
4. நாகாலாந்து
5. உத்தரப் பிரதேசம்
6. மணிப்பூர்
7. தமிழ்நாடு
8. ராஜஸ்தான்
9. மேற்கு வங்காளம்
10. குஜராத்"
என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதை தவிர, தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தொடர்ந்து நிதி ஒதுக்கி வருகிறது. மகாபலிபுரத்தில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைக்க 99 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தென்னிந்திய சிரபுஞ்சியாக விளங்கும் நீலகிரியின் தேவாலாவில் மலர் தோட்டம் அமைக்க 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீர்வாழ் உயிரின பூங்காக்கள் தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் நீர்வாழ் உயிரின பூங்காவுக்கு ரூபாய் 127.71 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்திய அளவில் மருத்துவ இடங்கள் அதிகரிப்பு; ஆனாலும் முதலிடத்தை இழந்த தமிழ்நாடு- இதுதான் காரணம்!