தமிழ்நாட்டில் ஹூக்கா பார்களுக்கு தடை விதிக்கும் மசோதா மாநிலத்தின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மருத்துவத்துறை அமைச்சர் எம். சுப்பிரமணியன் இந்த மசோதாவை சட்டப்பேரவையில் புதன்கிழமை அன்று தாக்கல் செய்தார். அங்கு அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


சேவை என்ற பெயரில் பல்வேறு உணவகங்களின் புகைபிடிக்கும் பகுதிகளில் ஹூக்கா புகை பிடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.


சென்னை நகரில் ஹூக்கா பார்கள் விற்கப்படுவது அதிகரித்து வருவதால் பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்படுவதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, ஹூக்கா பார்களை ஒழுங்குப்படுத்துவதற்காக சட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை.


 






சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருள்கள் (விளம்பரம் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல், விநியோகம் ஆகியவற்றில் தடை மற்றும் ஒழுங்குமுறை) 2003 (2003இன் மத்திய சட்டம் 34) சட்டத்தை அமைச்சர் எம். சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். தமிழ்நாடு அரசுக்கு ஏற்ற வகையில் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஹூக்கா பார்களை தடை செய்யவும், மீறினால் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஹூக்கா பார் தொடர்பான அனைத்து பொருள்களையும் பறிமுதல் செய்ய இந்த மசோதா சப் இன்ஸ்பெக்டர் பதவிக்குக் குறைவாக இல்லாத அனைத்து காவல்துறை அலுவலருக்கும் அதிகாரம் வழங்கியுள்ளது.


முன்னதாக, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையிலான மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 26 ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்ட மசோதாவிற்கு, தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


இதையடுத்து தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார். 


அக்டோபர் ஒன்றாம் தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக, அக்டோபர் 7 ஆம் தேதி தகவல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஆன்லைன் விளையாட்டை தடை செய்வது தொடர்பான மசோதா, அரசிதழில் வெளியானது. அதை தொடர்ந்து, சட்டமாக நடைமுறைக்கு வந்தது. 


இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டை தடை  செய்வதற்கான நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து, நேற்று தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்ட தொடரில் நிரந்தர சட்டமாக இயற்றப்பட்டது.