இமாச்சலப் பிரதேசத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சிம்லா நகர்ப்புறத் தொகுதியில் டீக்கடைக்காரர் ஒருவர், 4 முறை நிறுத்தப்பட்ட பாஜக அமைச்சருக்கு பதிலாக களமிறக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ஆம் ஆண்டு, ஜனவரி 8ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான முடிவுகள், டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.
இமாச்சலப்பிரதேசத்தில் தற்போது முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இச்சூழலில் முன்னதாக இரண்டு கட்டங்களாக பாஜக அதன் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
அதன்படி, அம்மாநிலத்தின் சிம்லா நகர்ப்புறத் தொகுதியில் டீக்கடைக்காரர் ஒருவர், 4 முறை நகர்ப்புறத் தொகுதியில் போட்டியிட்டுள்ள பாஜக அமைச்சருக்கு மாற்றாக நிறுத்தப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் வரும் சிம்லா நகர்ப்புறத்தொகுதியில் தற்போது டீக்கடை நடத்தி வரும் சஞ்சய் சூட் என்பவர் பாஜக சார்பாக போட்டியிடும் நிலையில், அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் கசும்ப்டி தொகுதியில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் தான் சிம்லா நகர்ப்புறத் தொகுதியில் போட்டியிட உள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சஞ்சய் சூட் ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
"சிம்லா நகர்ப்புறத்தொகுதி போன்ற பரபரப்பான தொகுதியில் பாஜக என்னை வேட்பாளராக்கியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னைப் போன்ற ஒரு சிறிய தொழிலாளிக்கு இது ஒரு பெரும் கவுரவம்.
நான் ஏபிவிபி மாணவர் பேரவையில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்தேன், ஆனால் நிதிப் பிரச்சினையால் அதனை ஒருகட்டத்தில் நிறுத்த வேண்டியதாயிற்று.
பின்னர் மருத்துவப் பிரதிநிதியாக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். அதன்பிறகு 1991இல் இந்த டீக்கடையை நிறுவினேன். இது எனது குடும்பத்துக்கு உணவளிக்கவும் அவர்களின் செலவுகளை ஈடு செய்யவும் உதவுகிறது.
நான் அரசியல் பின்னணியில் இருந்து வரவில்லை. 1980ஆம் ஆண்டில் இருந்து பாஜகவுக்காக உழைத்து வருகிறேன். இத்தகைய சூழலில் கட்சி எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளது. நான் இரண்டு முறை சிம்லா முனிசிபல் கார்ப்பரேஷனின் கவுன்சிலர் ஆனேன். பின்னர் சிம்லா பிரிவின் தலைவராக ஆனேன்.
இன்று சிம்லாவில் இருந்து கட்சி என்னை வேட்பாளராக அறிவித்துள்ளது குறித்து நான் பெருமைப்படுகிறேன். எனது கட்சிக்கு என்னால் கைம்மாறு செலுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.