தமிழகம் மற்றும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் நடைபெற்ற முக்கிய அரசியல்- சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.        


1. காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.  அந்த கடிதத்தில், "இந்தியாவில் தற்போது கொரோனா சூழல் பெரிய பேரிடராக மாறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல முறை நாங்கள் உங்களுடைய கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறோம். ஆனால் நாங்கள் கூறிய அனைத்து கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை உங்கள் அரசு நிராகரித்து விட்டது. அதுவும் தற்போதைய நிலைமைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.  


2. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். நேற்று, சென்னையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். 



 


3.  ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி ரஹோத்தமன் நேற்று காலமானார். அவருக்கு வயது 72.
கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கை விசாரித்த இவர், 36 ஆண்டுகாலம் சிபிஐயில் பணியாற்றியவர். குடியரசுத்தலைவர் விருதும் இவருக்கு  வழங்கப்பட்டது.


4. தெலங்கானா மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று  பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, அடுத்த 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


5. இந்தியாவில் தற்போது கொரோயனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 37,04,099 ஆக சரிந்துள்ளது. இது நாட்டின் மொத்த மதிப்பில் 15.87 சதவீதமாகும். தொடர்ந்து இரண்டாவது நாளாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதாவது,  தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய பாதிப்புகளை விட புதிதாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11,122 பாதிப்புகள் குறைவாக பதிவாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 4,205 உயிரிழப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.


 



 


6. இந்திய ரயில்வே இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு 396 டேங்கர்களில் சுமார் 6,260 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை விநியோகித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வாயிலாக 800 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகிக்கப்பட்டது. 


7. கடந்த சில வாரங்களில், தமிழகத்தில் ரெம்டெசிவிர் உட்பட மருந்துகளின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. 



 


8. திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் வழியாக மால்டா டவுன் வரை அதிவிரைவு கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்தது.


9. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 293 உயிரிழப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,72,735 ஆக அதிகரித்துள்ளது. 


10. தமிழகத்தில் கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க, இன்று மாலை 5 மணிக்கு, சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.