காவிரி நதிநீர் பங்கீடு குறித்த சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது. கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் கர்நாடாகா அணைகளில் போதிய தண்ணீர் இல்லை குடிநீர் தேவைக்காக நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும், தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது என குறிப்பிட்டு பேசினார்.  இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் அம்மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தேவையற்ற பிரச்னைகளை தருவதாக, முதலமைச்சர் சித்தராமையா பேசியிருந்ததும் சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்த அவசர மனு மீதான விசாரணை வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.


இந்நிலையில் நேற்று காணொலி காட்சி மூலமாக காவிரி மேலாண்மை ஆணையம் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது மேலும் 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடக்கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இப்படி இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் அறிவுரைப்படி காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை திறந்துவிடவும், இது தொடர்பாக மத்திய அரசு வலியுறுத்தவும் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பிக்கள், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ வழக்கமான ஆலோசனை கூட்டம் தான் இது. கர்நாடகாவில் தண்ணீர் இருக்கிறது ஆனால் தமிழ்நாட்டிற்கு காவிரி மேலாண்மை வாரியத்தின் அறிவுறுத்தல் படி தண்ணீர் தர மறுக்கின்றனர். கிட்டத்தட்ட 54 டி.எம்.சி தண்ணீர் உள்ளது ஆங்காங்கே சின்ன சின்ன அணைகளை கட்டி நீரை நிறுத்தி வைத்துள்ளனர். காவிரி  ஒழுங்காற்று குழு சுமார் 12,500 கன அடி நீர் கொடுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் வெறும் 5000 கன அடி நீர் கொடுக்க உத்தரவிடப்பட்டது. அதிலும் முழுமையாக இல்லாமல் 3500 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகா நினைத்திருந்தால் போதிய தண்ணீர் கொடுத்திருக்கலாம், அதனை அவர்கள் செய்யவில்லை. இல்லையென்றால் நெருக்கடியான நேரங்களில் தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் காட்டிய வழிமுறைகளை பின் தொடர்ந்து கொடுத்திருக்கலாம், ஆனால் அதையும் செய்யவில்லை. இந்த காரணத்திற்காக நாங்கள் மேல் முறையீடு செய்ய உள்ளோம்.


காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடாக அரசிற்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். குடிநீருக்கு பற்றாகுறை இருக்குமென கூறி தண்ணீர் திறக்க மறுக்கின்றனர். எத்தனை தான் குடிநீருக்கு கொடுப்பது? இப்படி எதற்கும் தலை அசைக்காமல் கர்நாடகா அரசு செயல்பட்டு வருகிறது. எதையும் கேட்கவில்லை என்றால் மத்திய அரசு எதற்கு உள்ளது என எங்கள் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டது. இதன் காரணமாக நாங்கள் உச்ச நீதிமன்றம் நாட உள்ளோம். உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். காவிரி ஒழுங்காற்று குழு கொடுக்கச் சொன்ன  கன அடி நீராவது தர வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்க உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.