Ponmudi Case: திமுக மூத்த தலைவர் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் மறுத்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.


ஆளுங்கட்சி - ஆளுநர் மோதல்:


எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கடும் அதிகார போட்டி நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் பல முறை தீர்ப்பு வழங்கியுள்ளது.


மாநில அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுடன் ஆளுநர் தொடர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் அரசு இயந்திரம் முடங்கும் அளவுக்கு பிரச்னை வெடித்துள்ளது. இந்த நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்த விவகாரம் புயலை கிளப்பியது. 


பொன்முடி வழக்கின் பின்னணி என்ன? 


சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தி.மு.க. தலைவர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 ஆண்டுகள் சிறை தண்டனை காரணமாக எம்.எல்.ஏ பதவியும் அமைச்சர் பதவியும் பறிபோனது.


இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடிக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதையடுத்து, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க திமுக முடிவு செய்தது.


எனவே, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் ரவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரம் கேட்டிருந்தார். ஆனால், பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்துவிட்டார். இதையடுத்து, பொன்முடி விவகாரத்தில் தி.மு.க. உச்ச நீதிமன்றத்தை நாடியது. தி.மு.க. தொடர்ந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்வு, ஆளுநரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தது.


ஆளுநரை புரட்டி எடுத்த உச்ச நீதிமன்றம்:


தனது செயல்கள் மூலம்  உச்ச நீதிமன்றத்தை மீறி ஆளுநர் நடந்து கொள்கிறார் என கூறிய தலைமை நீதிபதி சந்திரசூட், "ஆளுநரின் செயல்கள் எங்களுக்கு அதிக கவலைகளை தருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற மறுக்கிறார். தண்டனைக்கு தடை விதிக்கும்போது, இந்த விவகாரத்தில் வேறு விதமான முடிவை எடுக்க ஆளுநருக்கு உரிமை இல்லை.


நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். இங்கு சட்டத்தின்படிதான், ஆட்சி நடக்கிறதா? அரசியல் சாசன பதவியில் இருப்பவர் எப்படி இப்படி கூற முடியும். ஆளுநர் என்பவர் பெயர் அளவுக்கு மட்டும் நிர்வாக தலைவராக இருக்கிறார். அவரால் அரசுக்கு அறிவுரை மட்டுமே வழங்க முடியும். அவ்வளவுதான்" என்றார்.


தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, "இந்த அரசியல் சாசன தவறை சரி செய்ய ஆளுநருக்கு நாளை வரை அவகாசம் அளிக்கிறோம். நாளைக்குள் அவரிடம் இருந்து ஏதாவது பாசிட்டிவ்வான தகவல் வரவில்லை என்றால், இந்த விவகாரத்தில் நாங்களே உத்தரவு பிறப்பிப்போம்" என்றார்.