எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து அதிகார போட்டி நிலவி வருகிறது. கேரளா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, பஞ்சாப், மேற்குவங்கம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலதாமதம் செய்வதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தாமதிப்பதாக கூறி, கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்ட போராட்டம்:


இந்த நிலையில், தெலங்கானா அரசை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை அவர் வேண்டுமென்றே தாமதிப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


குறிப்பிட்ட கால அளவுக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 


கடந்த சில மாதங்களாகவே, தமிழ்நாடு ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம், திராவிட மாடல் அரசாங்கம், தமிழ்நாடு அரசின் பெயர் மாற்றம் போன்ற விவகாரங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே வார்த்தை போர் வெடித்த வண்ணம் இருக்கிறது.


முதலமைச்சர் ஸ்டாலின் கையில் எடுத்த ஆயுதம்:


இப்படிப்பட்ட சூழலில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்திருக்கும் வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "மாநில சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கும் அரசாணைகளுக்கும் உரிய நேரத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை.


12 மசோதாக்கள், 54 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான கோப்புகள், வழக்கு தொடர்வதற்கு அனுமதி கேட்டு அனுப்பப்பட்டுள்ள 4 கோப்புகள் தற்போது ஆளுநர் ரவியிடம் நிலுவையில் உள்ளன. மக்களின் விருப்பத்தை ஆளுநர் மட்டுப்படுத்துகிறார். தனது பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


திராவிடக் கருத்தியலுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, "ஆரியம், திராவிடம் என்பதே கிடையாது. திராவிடம், ஆரியம் என்ற இனங்கள் இருப்பது போன்ற பிரிவை உருவாக்கி, திராவிடர்கள் என்பவர்கள் தனி இனம் என்ற கருத்தாக்கத்தைத் தவறாகப் புகுத்தியவர் ஆங்கிலேய மிஷனரி கால்டுவெல்தான். அவர் பள்ளிப்படிப்பைக்கூடத் தாண்டாதவர்" எனச் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் சர்ச்சையைக் கிளப்பினார்.


ஆளுநரின் இந்தக் கருத்துக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் கடுமையாக எதிர்வினையாற்றினர். அதேபோல, ஆளுநர் மாளிகையின் வாயிலின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது.