தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கேரளா மாநிலத்தின் கொச்சியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக சில விஷயங்களை பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில், “வன்முறையை எப்போதும் இந்தியா ஏற்று கொள்ளாது. துப்பாக்கியால் பேசுபவர்களுக்கு துப்பாக்கியால் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிராக பேசுபவர்களிடம் எப்போதும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது. கடந்த 8 ஆண்டுகளாக ஆயுதங்கள் ஏந்தி வன்முறை கையாளும் எந்த அமைப்புகளுடனும் அரசு பேச்சுவாரத்தை நடத்தவில்லை.
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அப்படி இல்லை. 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு 9 மாதங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் கூட்டாக இருநாடுகளும் தீவிரவாத்தால் வன்முறை சந்தித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர்.
பாகிஸ்தான் நம்முடைய எதிரியா? அல்லது நண்பரா? அதுவே அப்போது நம்மிடம் தெளிவாக இல்லை. இதன்காரணமாக அப்போது குழப்பமான சூழல் இருந்தது. ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாலாகோட் பகுதியில் சிறப்பான ஒரு தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. அத்துடன் அப்போது ஒரு செய்தி வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது.
அதாவது தீவிரவாதத்தை கையில் எடுப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று இந்த தாக்குதல் அறிவுறுத்தியது. மேலும் கடந்த பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு பிரச்சினையாக மாவோயிஸ்ட் தாக்குதல்கள் இருந்தன.
ஏனென்றால் அப்போது 185 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் செயல்பட்டு வந்தனர். இது கடும் சவாலான ஒன்றாக அமைந்தது. அந்த நிலை தற்போது மாறியுள்ளது. தற்போது வெறும் 8 மாவட்டங்களில் மட்டுமே மாவோயிஸ்ட்கள் உள்ளனர். அவர்களின் செயல்பாடுகளும் தற்போது வேகமாக குறைந்து வருகிறது.
அத்துடன் தற்போது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் வன்முறை சம்பவங்கள் மிகவும் குறைந்து வருகின்றன. இதற்கு மக்களின் பங்களிப்பு ஒரு முக்கியமான காரணம். ஏனென்றால், தற்போது மக்கள் தீவிரவாதத்தை கையாளும் நபர்களை கண்டறிந்து அவர்களை ஒதுக்கி வருகின்றனர். இதன்காரணமாக வன்முறையை கையாளும் நபர்களை யாரும் நம்புவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்