தமிழ்நாட்டிற்கான முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்துக்கொண்டிருக்கிறது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. டெல்லி, தமிழ்நாடு, கர்நாடக போன்ற மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பி வருகின்றனர். இதனால், கொரோனா நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
அண்டை மாவட்டங்களில் படுக்கைகள் கிடைக்காமல் தவிக்கும் கொரோனா நோயாளிகள் சென்னை வருகின்றனர். இதனால், இங்கு ஆம்புலன்ஸ்கள் வரிசையில் நிற்கின்றன. கோவை, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியுள்ளன. சேலம், தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக இல்லை. கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம். தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே ஐசியூ படுக்கைகள் உள்ளன.
இந்நிலையில், முதல் ஆக்சிஜன் ரயில் தமிழ்நாட்டிற்கு வந்துக்கொண்டிருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் இருந்து தமிழ்நாட்டிற்கான முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்துக்கொண்டிருக்கிறது. 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சுமை கொண்ட 4 டேங்கர்களை ஏற்றிக்கொண்டு வந்துக்கொண்டிருக்கும் இந்த ரயில் தண்டையார்பேட்டைக்கு நள்ளிரவு 1 மணிக்கு வந்தடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று தொடங்கியது. கண்காணிப்புக் குழு தலைவரும், தூத்துக்குடி ஆட்சியருமான செந்தில்ராஜ் அதற்கான ஏற்பாட்டை செய்தார்.