இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேலாக பதிவாகி வருகிறது. அத்துடன் பல மாநிலங்களில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவும் நோயாளிகள் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் மிகவும் வேகமானதற்கான காரணம் தொடர்பாக உலக சுகாதார மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, "தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பி.1.617 என்ற வகையில் உருமாரிய ஒன்று. இது மிகவும் பயங்கரமாக பரவும் தன்மையை கொண்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளது.
மேலும் வைரஸ் தன்மையை போல் இந்தியாவில் கொரோனா பரவல் இந்த அளவிற்கு அதிகரிக்க வேறும் சில காரணங்கள் உண்டு. அதாவது இந்தியாவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பிரச்சார கூட்டங்கள் மிகவும் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தக் கூட்டங்களில் அதிகளவில் மக்கள் கூடியதால் அவர்களுக்கு நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. இவற்றுடன் சேர்ந்து வைரஸ் பரவும் தன்மையையும் அதிகமாக இருந்ததால் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்தியாவில் பரவி வரும் பி.1.617 உருமாறிய கொரோனா இந்தியா தவிர பிரிட்டனில் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொடர்பான முழுமையான ஆய்வு இன்னும் நடத்தப்படவில்லை. எனினும் இந்தியாவில் இருக்கும் நிலைமையை வைத்து பார்க்கும் போது இதன் பரவல் தன்மை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் கும்பமேளா நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. அங்கு சென்று திரும்பிய பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதேபோல கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளும் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உலக சுகாதார மையம் அதையும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.