Tamil Nadu Coronavirus LIVE News : தடுப்பூசி கோரிய உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

June 6 Covid-19 Live News Updates: தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 06 Jun 2021 09:03 PM
தடுப்பூசி கோரிய உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நீலகிரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்கள் அவர்களே தடுப்பூசியை வாங்கிக்கொள்ள உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் நேற்றோடு நிறைவு பெற்றது. இதில் யாரும் பங்கேற்காததால் மறு டெண்டர் விடுத்து, தடுப்பூசியை நாமே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என தொழில்துறை அமைச்சர் டெல்லிக்கு சென்று தொடர்புடைய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. கால அவகாசம் கேட்டுள்ளனர். பயோடெக் நிறுவனத்தினரும் ஆய்வு செய்துள்ளனர். இதில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

தமிழ்நாட்டில் 21 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 20 ஆயிரத்து 421 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 161 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 434 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 645 நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 44 ஆயிரத்து 289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் கட்டுக்குள் வரத் தொடங்கிய கொரோனா

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக இருந்த டெல்லியில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரத் தொடங்கியது. நேற்று 414 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று டெல்லியில் 381 நபர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், டெல்லியில் கொரோனா பாதிப்பு சதவீதம் 0.5 ஆக குறைந்துள்ளது. நேற்று 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 34 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 1,189 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு விகிதமும் 1.72 சதவீதமாக குறைந்துள்ளது. டெல்லியில் இன்றைய நிலவரப்படி, 5 ஆயிரத்து 889 நபர்கள் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

தமிழக அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கடந்த வாரம் 7 ஆயிரம் என்ற அளவில் இருந்த தினசரி பாதிப்பு தற்போது 2 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 5 லட்சத்து 15 ஆயிரத்து 18 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக 7 ஆயிரத்து 425 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு அடைந்தோரில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 303 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 290 ஆக குறைந்துள்ளது.  

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸி மீட்டர் வழங்க சென்னை மாநகராட்சி திட்டம்.

நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸி மீட்டர் வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  


60 வயதுக்கு மேற்பட்டவர்களும், இணைநோய்த்தன்மை உடையவர்களும் மருத்துவ அதிகாரியால் முறையாக மதிப்பிடப்பட்ட பிறகே வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வாறு, சிகிச்சைப் பெறுபவர்களுக்கு இந்த ஆக்ஸி மீட்டர் வழங்கப்படும்.    

vandalur Anna park Covid-19 Lions: வண்டலூர் உயிரியியல் பூங்காவில் முதல்வர் நேரில் ஆய்வு

வண்டலூர் உயிரியியல் பூங்காவில் முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியில் பூங்காவில் ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 


பூங்காவில் மொத்தமுள்ள 11 சிங்கங்களில் ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா நோய்தொற்று கண்டறியப்பட்டதாக அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்தது..  மேலும், மீலா என்ற ஒன்பது வயதுள்ள பெண் சிங்கம் இந்த நோய் தொற்று காரணமாக உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.    

கடந்த 60 நாட்களில் மிகக்குறைவான பாதிப்பை இந்தியா பதிவுசெய்தது.

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,14,460 பேருக்கு கொரோனா நோய்த தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது; இது கடந்த 60 நாட்களில் மிகக்குறைவு.



உதகமண்டல அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

உதகமண்டல அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் இன்று ஆய்வு மேற்கொண்டார்.


காக்கா தோப்பு பகுதியில் 447 கோடி ரூபாய் மதிப்பில்  கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

nilgiris District Covid-19 data Tracker: கொரோனா பாதிப்பு நிலை என்ன?

நீலகிரி மாவட்டத்தின் ஒட்டுமொத்தமாக கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புகளில், 43 சதவிகித பாதிப்பு 2021 மே மாதம் ஏற்பட்டுள்ளது..

        


தற்போது, நீலகிரி மாவட்டத்தில் 4282 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 



Covid-19 Vaccine Global Tender: தமிழ்நாட்டுக்கு தடுப்பூசிவழங்க முன்வராத தனியார் நிறுவனங்கள்

90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்கவேண்டும் என்ற தமிழக அரசின் உலகளாவிய ஒப்பந்தத்துக்கு எந்த தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கும் விண்ணப்பிக்கவில்லை. இந்த, ஒப்பந்தம் கோரி விண்ணப்பம் செய்வதற்கான கால அளவு நேற்றுடன்( ஜூன் 5) முடிவடைந்தது. 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துது. கடந்த மே 15-ஆம் தேதி,  உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் கோரியது.  அதில், முதற்கட்டமாக, 90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகளை விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.


மேலும் , விவரங்களுக்கு

18 வயது முதல் 44 வயதிற்குட்பட்ட 16 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

18 வயது முதல் 44 வயதிற்குட்பட்ட 16 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நேற்று முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.  

மேலும் மூன்று மாதங்களுக்கு 2 ஆயிரம் நீட்டிக்கவேண்டும் - ரவிக்குமார் எம்.பி கோரிக்கை

 மேலும் மூன்று மாதங்களுக்கு மாதம் 2 ஆயிரம்  நீட்டிக்கவேண்டும் என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், தமிழ்நாடு முதல்வருக்கு    கோரிக்கை  வைத்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வருமானத்தை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மீட்பதற்கு நேரடியாக அவர்கள் கையில் உதவித்தொகையை வழங்குவதே சிறந்ததெனப் பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர். அதற்கேற்ப ஆட்சிப் பொறுப்பேற்றதும் மே ஜூன் மாதங்களில் மாதம் 2 ஆயிரம் என 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்தார். வாழ்வாதாரம் இழந்தோருக்கு அது பேருதவியாக உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா பேராபத்து விலகாத நிலையில் அந்தத் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கவேண்டும் என வேண்டுகிறேன்"  என்று தெரிவித்தார்.  


 

எழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது? ப.சிதம்பரம் கேள்வி

எழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து,அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,    


கொரோனா பெருந்தொற்றின் பொருளாதார விளைவுகளை மத்திய அரசு கையாண்ட விதத்தை நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். இந்தப் பெருந்தொற்று கீழ் அடுக்கு நடுத்தர மக்களை (lower middle class) எப்படிப் பாதித்திருக்கிறது என்று ஒரு அறிவு பூர்வமான ஆய்வை ஒரு வல்லுநரின் துணையுடன் நடத்தினேன்


1004 நபர்கள் ஆய்வில் கலந்து கொண்டார்கள். 


கடந்த 14 மாதங்களில் தங்கள் மாத வருமானம்/ஊதியம் குறைந்திருப்பதாக 880 நபர்கள் பதிலளித்தார்கள்


758 நபர்கள் தங்கள் குடும்பச் செலவு கூடியிருப்பதாகச் சொன்னார்கள்


725 நபர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து பணம் எடுத்திருக்கிறார்கள்.


329 நபர்கள் தங்கள் உடமைகளை விற்றனர் அல்லது அடமானம் வைத்திருக்கிறார்கள்


702 நபர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள்


இந்தக் கீழ் அடுக்கு நடுத்தர மக்கள் (lower middle class) ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்


இவர்களுக்கும் இவர்களை விட வறுமையில் உள்ள எழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது?
23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் இயலாமையும் தவறான கொள்கைகளுமே காரணம் என்ற குற்றச்சாட்டு நியாயம் தானே?" என்று பதிவிட்டார்.  

காப்பீட்டு நிறுவனத் தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை

பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு தொகுப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 419 கோரிக்கைகள் இது வரை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ரூ 209.5 கோடி காப்பீட்டுதாரர்களின் வாரிசுகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.


முன்னதாக, மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கைகளில் நிலுவையில் உள்ளவற்றை விரைந்து பைசல் செய்வது தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று  சந்தித்து பேசினார். 


 






 


மேலும், பிரதமரின் ஜீவன் ஜோதி காப்பீட்டு திட்டத்தின் கீழ் 4.65 லட்சம் கோரிக்கைகளுக்கு ரூ 9,307 கோடி செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெருந்தொற்று தொடங்கியது முதல் (2020 ஏப்ரல் 1) இன்று வரை  99 சதவீத பைசல் விகிதத்துடன் 1.2 லட்சம் கோரிக்கைகளுக்கு ரூ 2,403 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறினார்.


கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு தொகுப்பு காப்பீட்டு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.    

11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி

தமிழ்நாட்டில் நாளை முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.  கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.   



இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு (Daily positivity rate) விகிதம் 5.78 சதவீதமாக உள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1.20 லட்சம் பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 58 நாட்களில் மிகக்குறைவு. அதே சமயம், 1,97,894 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 23வது நாளாக, தினசரி குணமடைந்தோர் எண்ணிக்கை, தினசரி கொரோனா பாதிப்பை விட அதிகமாக உள்ளது


தினசரி கொரோனா பாதிப்பு (Daily positivity rate) விகிதம் 5.78 சதவீதமாக உள்ளது.  அதே நேரத்தில்,  கொரோனா பரிசோதனை அளவு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Background

Tamil Nadu Coronavirus Latets News Live Updates: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்  21,140 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதில், அதிகபட்சமாக கோயம்பத்தூர் மாவட்டத்தில் 2663 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், 32,472 பேர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 443 கொரோனா இறப்புகள் தமிழ்நாட்டில் பதிவானது. 



 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.