டெல்லிக்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியை தொடர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.


பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லிக்கு சென்றுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.  தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட வேண்டிய நிதியை வழங்குவது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை ஒதுக்கிடு செய்வது, சமக்ரசிக்‌ஷா திட்டத்திற்கான நிதியை ஒதுக்குவது, இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் பேசியுள்ளார்.


டெல்லியில் ஸ்டாலின் விசிட்: பிரதமர் உடனான சந்திப்பை தொடர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார் ஸ்டாலின். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பெரும் வெற்றியை பதிவு செய்தது.


ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் பெரும் சக்தியாக இந்தியா கூட்டணி உருவெடுத்துள்ளது. திமுகவுடன் காங்கிரஸ் தேசிய தலைவர்கள் இணக்கமாக இருந்தாலும் சமீப காலமாக மாநில அளவில் உரசல் ஏற்பட்டு வருகிறது. 


குறிப்பாக, பல முக்கிய விவகாரங்களில் திமுகவை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசி வருகிறார். சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது. சென்னையில் நடந்த ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடர்புப்படுத்தி கார்த்தி சிதம்பரம் விமர்சித்தார்.


மாறுமா அரசியல் கணக்கு: வரும் 2026ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், இம்மாதிரியான செயல்கள் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆனால், தேசிய அளவில் ராகுல் காந்தி தொடங்கி மாநில அளவில் செல்வப்பெருந்தகை வரை, அனைவரும் திமுக தலைவர்களுடன் இணக்கமாகவைே இருந்து வருகின்றனர்.


 






இந்த நிலையில், சோனியா காந்தியை ஸ்டாலின் சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பை பற்றி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடுகையில், "காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவரான சோனியா காந்தியை நான் சந்தித்தது, மகிழ்ச்சியான, குடும்பப் பிணைப்பின் இதயப்பூர்வமான தருணம்" என பதிவிட்டுள்ளார்.


ஏற்கனவே, கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுகவுக்கு பெரும் நெருக்கடியை தந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.