"இந்தியாவில் உற்பத்தி செய்ய உலகம் விரும்புகிறது" என்ற தலைப்பில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதை, பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் இன்று பகிர்ந்தது.
மத்திய அமைச்சரின் கட்டுரையைப் பகிர்ந்து, பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது, "மேக் இன் இந்தியா இயக்கம் இந்தியாவை விருப்பமான முதலீட்டு இடமாக நிலைநிறுத்தியுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்தியா: தொழில் நிறுவனங்களுக்கு, குறிப்பாக, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்தரப் பொருட்களை உற்பத்தி செய்ய அதிகாரம் அளித்தல், தரமற்ற தயாரிப்புகளின் இறக்குமதியாளர்களாக இருந்து வந்த பல துறைகளை, உலகத் தரம் வாய்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களாக மாற்றுதல் ஆகியவற்றை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எடுத்துரைத்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு, செப்டம்பர் 25 ஆம் தேதி தொடங்கப்பட்ட 'மேக் இன் இந்தியா' எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்த திட்டம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது, புதுமைகளை ஊக்குவிப்பது, திறன் மேம்பாட்டை மேம்படுத்துவது மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பது ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டம்:
கடந்த 2014ஆம் ஆண்டு முதல், இந்தியா 667.4 பில்லியன் அமெரிக்க டாலர் (2014-24) அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. இது முந்தைய 10 ஆண்டுகளை (2004-14) விட 119% அதிகரித்துள்ளது. இந்த முதலீட்டு வரத்து 31 மாநிலங்கள் மற்றும் 57 துறைகளில் பரவியுள்ளது.
பெரும்பாலான துறைகள், 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு திறந்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில் (2014-24) உற்பத்தித் துறையில் அந்நிய நேரடி முதலீடு 165.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, இது முந்தைய 10 ஆண்டுகளுடன் (2004-14) ஒப்பிடும்போது 69% அதிகரிப்பாகும்.