பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவின் சொந்த கிராமமான ஒடிசாவில் உள்ள ரைரங்கபூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வெற்றி பேரணி, பழங்குடியின நடன நிகழ்ச்சி ஆகியவை திட்டமிடப்பட்டிருப்பதால் கிராமம் முழுவதும் திருவிழா போல காட்சி அளிக்கிறது. அதேபோல, கிராமத்தினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கும் வகையில் லட்டுக்கள் தயாரிக்க பணி அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 20,000 லட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இதுகுறித்து உள்ளூர்வாசி ஒருவர் நேற்று கூறுகையில், "ஒடிசாவுக்கும் ரைரங்கபூருக்கும் நாளை மிக பெரிய நாள். ஏனெனில், இந்திய வரலாற்றில் முதல்முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் குடியரசு தலைவராக போகிறார். இங்கு முழுவதும் கொண்டாட்ட மனநிலையே உள்ளது. 2,000 இனிப்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பட்டாசுகள் வெடிக்கப்பட்ட பழங்குடியின நடனம் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெற்றி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.


முர்முவின் பள்ளி நாள்களை நினைவு கூர்ந்த அவரது ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், "முர்மு சிறப்பான மாணவராக இருந்தார். மக்களுக்கு எப்போதும் சேவை வேண்டும் என விரும்பினார் என்றார்.


நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. திரௌபதி முர்முவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய நிதயமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் சுமார் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை உள்பட 31 இடங்களில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்கு பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன. 


இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறுபவர் இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக வரும் 25ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.


குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் நாடாளுமன்ற எம்பிக்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணப்படும். அதன்பின்னர் வரிசைப்படி உள்ள முதல் 10 மாநிலங்களின் எம்.எல்.ஏக்கள் பதிவு செய்திருந்த வாக்குகள் எண்ணப்படும். அதன்பின்னர் அடுத்த 10 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இப்படி அனைத்து மாநிலங்கள் சட்டப்பேரவையில் பதிவான வாக்குகள் அனைத்தும் மாலைக்குள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.