Sushil Kumar Modi: பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுசில் குமார் மோடியின் அரசியல் பயணம் தொடர்பாக இந்த தொகுப்பில் அறியலாம்.
சுசில் குமார் மோடி மரணம்:
பத்தாண்டுகளுக்கும் மேலாக பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சராகவும், மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான என்டிஏ கூட்டணியை வலுப்படுத்தியவராகவும் திகழ்ந்தவர் சுஷில் குமார் மோடி. பல மாதங்களாக புற்றுநோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். நிதிஷ் குமாரும், சுசில் குமார் மோடியும், "ராமர்-லட்சுமணன் ஜோடி" என்ற புகழப்பட்டனர்.
யார் இந்த சுசில் குமார் மோடி?
1952ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி பிறந்த சுசில் குமார் மோடி, பீகாரில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அவர் 2005 முதல் 2013 வரை பீகார் நிதி அமைச்சராகவும், 2017 முதல் 2020 வரை மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் பணியாற்றினார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் (ஆர்எஸ்எஸ்) வாழ்நாள் உறுப்பினரான சுசில் குமார், பல்வேறு அரசியல் மற்றும் சட்டமன்ற பொறுப்புகளில் முக்கியப் பங்காற்றினார். அவரது அரசியல் பயணம் பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஆர்வலராகத் தொடங்கியது, அங்கு மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக 1973 இல் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். அதே நேரத்தில் அவரது பல சகாக்களைப் போலவே, ஜெய்பிரகாஷ் நாராயணின் இயக்கத்திலும் தொடர்புடையவர். மிசா சட்டத்திற்கான எதிர்ப்பிலும் தீவிர பங்காற்றினார். அவசரநிலைக் காலத்தில் தீவிரமாக களமாடினார்.
அரசியலில் சுசில் குமார் மோடி:
1990ம் ஆண்டுகளில் தீவிர அரசியலுக்கு மாறிய மோடி, பாட்னா மத்திய தொகுதியில் வெற்றி பெற்று தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பீகாரில் பாஜகவின் தலைவராகவும், சட்டமன்றத்தில் கட்சியின் தலைமைக் கொறடாவாகவும், பின்னர் மாநிலச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் தாக்கத்தை ஏற்படுத்தினார். சுசில் குமார் 2004 ஆம் ஆண்டு மக்களவையில் பாகல்பூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவரது புத்திசாலித்தனத்திற்காக பரவலாக அறியப்பட்ட அவர், பீகாரில் பல்வேறு NDA அரசாங்க அமைப்புகளிலும், ஜார்கண்ட் மாநிலத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்தார். 2017 ஆம் ஆண்டில், நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத்துக்கு சவால் விடுத்து, பீகாரில் JDU-RJD மகா கூட்டணி அரசை கலைத்ததில் முக்கிய நபராக உருவெடுத்தார். மாநிலத்தில் பாஜகவின் முகமாகவும் உருவெடுத்தார்.
நிதிஷ்குமாரிடம் இருந்து பிரிந்த சுசில் குமார்:
2017 ஆம் ஆண்டில், நிதிஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியதும், 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2020 பீகார் தேர்தல்களில் சுசில் குமார் போட்டியிட்டார். நிதிஷ் குமாருடனான கூட்டணியால் அவர்கள், "ராம்-லட்சுமணன் ஜோடி" என பாராட்டப்பட்டனர். இருப்பினும், நிதிஷ்குமார் மீண்டும் லாலு பிரசாத் யாதவ் அணிக்கு மாறியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. பல சந்தர்ப்பங்களில் இருவரும் கருத்து மோதல்களில் ஈடுபட்டனர். டிசம்பர் 8, 2020 அன்று, மோடி பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தான் புற்றுநோயுடன் போராடி வருவதாகவும், 2024 மக்களவைத் தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்றும் சுசில் குமார் மோடி அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.