பயணிகள், சக ஊழியர்களிடம் உரையாடுவதில் எவ்வித தடையும் இல்லாமல் இருக்க, இதர மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. 


ரயில்வே நிலையங்களில் உள்ள டிக்கெட் வழங்கும் இடங்கள், ரயில் நிலையங்கள், டிக்கெட் பரிசோதகர், RPF ஊழியர்கள், ரயிலில் பாதுகாப்பிற்காக இருப்பவர்கள் உள்ளிட்டோர் பெரும்பாலும் இந்தி மொழியில் மட்டுமே பேசுவார்கள். இவர்களுக்கு தமிழ் மொழி புரியாது. தமிழ்நாட்டில் உள்ளவர்களுடன் இந்தியில் உரையாடினால் புரியுமா? அவர்கள் உள்ளூர் மொழி கொஞ்சம் கூட தெரியாமல் இருக்கிறதே என பலரும், அவர்களுடன் உரையாடுவதில் உள்ள சிக்கல்களை அவ்வப்போது தெரிவிப்பதுண்டு.


இந்நிலையில்,  சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே அனுப்பியுள்ள அறிக்கையில்,அடிப்படை தமிழ் மொழியில் பேசுவதற்கு உதவும் கையேட்டை தயாரித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கான பேசுவதற்கு உதவியாக இருக்கும் அடிப்படை கையேடு ஒன்றை தயாரிக்கவும் அவர்களுக்கு பயிற்சியளிக்கவும் தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.


அந்த அறிக்கையில், பணி செய்யும் இடத்தின் பிராந்திய மொழியை கற்பதன் மூலம் பயணிகள், சக ஊழியர்களிடம் எளிதாக உரையாட முடியும். இதன் மூலம் மக்களுக்கு திருப்திகரமான சேவையையும் வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பாஷா சங்கம் என்ற செயலி..


மத்திய கல்வித் துறையால் உருவாக்கப்பட்ட பாஷா சங்கம் என்ற செயலியை பயன்படுத்தி எளிதாக உள்ளூர் மொழிகளை கற்கலாம். விர்ச்சுவல் அகாடமி (Tamil Virtual Academy)என்ற இணையதளத்தையும் தமிழ் மொழியை பேசுவதற்கு பயிற்சி எடுக்க பயன்படுத்தலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ ஓராண்டிற்கும் மேலாக பணியாளர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி அளிக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது.” என்று உறுதி செய்துள்ளார். 


Zonal Rail Users Consultative Committee (ZRUCC) அதிகாரி இது தொடர்பாக கூறுகையில், “ரயில்வே துறையில் பணி செய்பவர்கள் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு தமிழ் மொழி பேசுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு சில ரயில் நிலையங்களில் 8 ஆண்டுகளாக பணி செய்யும் நபர்களை எனக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கு தமிழ் பேச தெரியாது. தமிழ் மொழி கற்றுக்கொள்ள வருபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கலாம்.” என்று தெரிவித்தார். 


அதோடு, சிலருக்கு ஆங்கிலத்தில் சரியாக டைப் செய்ய தெரியவில்லை. அவர்களுக்கு ஆங்கில மொழியையும் கற்றுத்தரலாம் என்று சில ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து, விரைவில் ரயில் நிலையங்களில் உள்ள ஊழியர்கள் தமிழில் பேச முயற்சி செய்தால், அது தேவையற்ற குழப்பங்களையும், நேர விரயத்தையும் தவிர்க்க உதவியாக இருக்கும்