சர்வதேச விமானத்தில் சமீப காலமாக நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களால், பயணிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவது குறித்து பலரும் ஆய்வு ஒன்றில் கேள்வியெழுப்பியுள்ளனர்.
நவம்பரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி நியூயார்க்கிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மது அருந்திய பயணி ஒருவர் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து அந்த பெண் விமான பணியாளர்களிடம் புகார் அளித்துள்ளார். விமானம் டெல்லியில் தரையிறங்கிய பின் அந்த பயணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனையடுத்து டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரனுக்கு அந்தப் பெண் கடிதம் எழுதியதை அடுத்து தொடர்ந்து இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனம் அளித்த புகாரின் பேரில் அந்த பயணியின் பெயர் சங்கர் மிஸ்ரா என்பதும், அவர தலைமறைவாகி விட்டதும் தெரிய வந்தது.
நாடு முழுவதும் போலீசார் தீவிர வேட்டை நடத்திய நிலையில், சங்கர் மிஸ்ராவை அவர் வேலை செய்த வெல்ஸ் பார்கோ என்ற அமெரிக்க நிறுவனம் பணி நீக்கம் செய்தது. தொடர்ந்து தன்னுடைய மொபைலை ஆஃப் செய்தி வைத்திருந்த சங்கர் மிஸ்ரா சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வந்தார். இதனை கண்காணித்து பெங்களூருவில் பதுங்கியிருந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதனிடையே நவம்பர் மாதம் நடந்த சம்பவத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முறையாக விசாரணை நடத்த தவறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஆய்வில் வெளிவந்த தகவல்
இந்நிலையில் லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், சர்வதேச விமானங்களில் மதுபானம் வழங்குவதைத் தடை செய்ய வேண்டும் என 48% பேரும், 89% பேர் நடந்த சம்பவங்களுக்கு எதிராக புதிய பாதுகாப்பு விதிமுறைகளை கோருவதாகவும் தெரிய வந்துள்ளது. அதேபோல் 50% பேர் குடிபோதையில் விமானத்தில் ஏறமாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என்றும், 40% பேர் போர்டிங் ஏஜெண்டுகள் அல்லது ஊழியர்கள் மது அளவை கண்டறியும் ப்ரீதலைசர் சோதனையை நடத்தலாம் எனவும் கூறியுள்ளனர்.
அவ்வாறு மது அளவை கண்டறியும் போது வரையறுக்கப்பட்ட அளவுகளின் அடிப்படையில், பயணிகளின் பயணத்தை ரத்து செய்யலாம் எனவும் 40% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.