பெண்கள் மற்றும் சிறுபான்மை பாலினத்தவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சாட்டும் போக்கு ஆண்டாண்டு காலமாக நிலவி வருகிறது.


அதிர்ச்சி தரும் பெற்றோரின் மனப்பான்மை


பாலினம் குறித்த மக்களின் மனப்பான்மை மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்காக அரசு நியமித்த குழு நடத்திய ஆய்வில் குறைந்தது 34 சதவிகிதப் பெற்றோர்கள் பாலியல் வன்முறைக்கு முக்கியக் காரணம் சிறுமிகளின் "நடத்தை மற்றும் அவர்களின் ஆடை அணியும் முறைதான்" என்று கருதுகின்றனர்.


சுமார் 35 சதவிகித ஆசிரியர்கள் ஒரு பெண்ணின் நடத்தை மற்றும் உடைகள் பாலியல் வன்முறைக்குக் காரணமாக இருப்பதாக கருதுகின்றனர். "தங்களுக்கு ஏற்படும் துன்புறுத்தலுக்கு பெண்களே காரணம் என்ற சமூகத்தின் கருத்தை இது பிரதிபலிக்கிறது" என்று கமிட்டி அரசாங்கத்திடம் சமர்ப்பித்த தேசிய கல்விக் கொள்கை (NEP) நிலைப் பத்திரத்தில் கூறியுள்ளது.


மங்களூருவைச் சேர்ந்த ஃப்ரீலான்ஸ் ஆலோசகர் ஒருவர் தலைமையிலான குழு, பாலின கல்வி குறித்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த மேலோட்டமான  கணக்கெடுப்பில் 1,070 ஆசிரியர்கள், 404 பெற்றோர்கள் மற்றும் 221 மாணவர்கள் கொடுக்கப்பட்ட 20 கேள்விகளுக்கு பதிலளித்தனர்.


"இது ஒரு ஆழமான ஆய்வாக இல்லாவிட்டாலும், பாலினத்தைப் பற்றிய மக்களின் நாடித் துடிப்பைப் புரிந்து கொள்ள உதவியது மற்றும் பாலினக் கல்விக்கான பரிந்துரைகளை வடிவமைப்பதில் சில நுண்ணறிவுகளை வழங்கியது" என்று அந்த ஆய்வறிக்கை கூறியது.


ஆசிரியர்களின் கருத்து


மேலும், எந்தவொரு பாலினத்தைச் சேர்ந்தவரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படலாம் என்று பெற்றோர்கள் கருதுவதாகவும், பெரும்பான்மையான பெற்றோர்கள் பெண்கள் விரும்பும் விதத்தில் ஆடை அணிவதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்று கருதுவதாகவும் அந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.


"ஆசிரியர்கள் பாலின சமன்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்களா அல்லது வித்தியாசமாக சிந்திக்கிறார்களா என்பதைப் புரிந்துகொள்ள சில கேள்விகள் கேட்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, ஆசிரியர்களிடையே மாணவர்களுக்கான பொறுப்புகளின் விநியோகம், பாலினம் சார்ந்த தொழில்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பங்கேற்பு மற்றும் அவர்களின் கல்வி சாதனைகள் ஆகியவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டன.


பெரும்பாலான ஆசிரியர்கள் சிந்திக்கும் போக்கிலிருந்து வித்தியாசமாக சிந்திக்கத் தொடங்கியிருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ”என்று அந்த ஆய்வு கூறியது.


ஆசிரியர்களைப் பொறுத்தவரை, அவர்களில் 45 சதவிகிதம் பேர் மாலை 5 மணிக்குப் பிறகு பெண்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று நினைக்கிறார்கள். பெண்கள் அந்தி சாயும் முன் வீட்டை அடைய வேண்டும் என்ற ஒரே மாதிரியான அக்கறையை இது முன்னிறுத்துகிறது,” என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.


சுமார் 40 சதவிகித ஆசிரியர்கள் பெண்கள் அலங்காரம் தொடர்பான பணிகளையும் ஆண்களுக்கு உறுதியான உடல் செயல்பாடுகள் தொடர்பான பணிகளையும் வழங்குவதாக சர்வேயில் ஒப்புக்கொண்டுள்ளார்கள். இது மாணவர்களிடம் பிரித்தளிக்கப்படும் வேலைகளில் ஆசிரியர்களிடையே இருக்கும் பாலின பாகுபாட்டைக் காண்பிக்கிறது.