கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புனேவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் குடித்துவிட்டு மதுபோதையில்,  தனது தந்தையின் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான போர்ஷே சூப்பர் காரை ஓட்டிச் சென்றுள்ளான். அப்போது அதிவேகமாக சென்ற கார், சாலையோரம் சென்றுகொண்டிருந்த இருவர் மீது மோத அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காரை ஓட்டியதாக கூறப்படும் சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் பிணை வழங்கப்பட்ட சம்பவம் மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதையடுத்து மீண்டும் அந்த சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை விஷால் அகர்வாலும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.






இந்நிலையில், அந்த சிறுவனில் தாத்தா சுரேந்திரா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கார் ஓட்டுனர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, சுரேந்திரா அகர்வால் மீது கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 355 மற்றும் 356 பிரிவின் கீழ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  குற்றஞ்சாட்டப்பட்டவரின் தாத்தாவுக்கு பல சட்ட விரோதமான வியாபாரங்களுடன் தொடர்பு இருப்பதாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரர்களுடன் சொத்து தகராறில் சோட்டா ராஜனின் உதவியைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரேந்திரா அகர்வால் 2009 ஆம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைப்பாளர் அஜய் போஸ்லேவைக் கொல்ல சோட்டா ராஜனின் உதவியைப் பெற்றதாக மத்திய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.  


இதற்கு கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  புனேவை சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரி  அமிதேஷ் குமார் கூறுகையில், ” அந்த சொகுசு காரை அந்த சிறுவன் ஓட்டவில்லை என்பதை நிரூபிக்க, அவரது குடும்பத்த்னர் முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்கு ஒரு படி மேலாக சென்று அவரது ஓட்டுநர் தான் காரை ஓட்டினார் என ஒப்புகொள்ளும்படி குடும்பத்தினரால் வலியுறுத்தப்பட்டது. மேலும் அந்த சிறுவன் தான் காரை ஓட்டிச் சென்றார் என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன” என தெரிவித்துள்ளார்.