இந்தியாவின் வைர வர்த்தக மையமாக திகழும் சூரத்தில் முன்னணி பணக்காரராக வலம் வருபவர் சாவ்ஜி தன்ஜி தோலாக்கியா. கடந்த 1962ஆம் ஆண்டு, ஏப்ரல் 12ஆம் தேதி, குஜராத்தின் துதாலாவில், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்தவர். தனது குடும்பம் பொருளாதார சவால்களை எதிர்கொண்ட போது, 14 வயதில் கல்வியை நிறுத்த முடிவு செய்தார்.


பல சவால்களை கடந்து, ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்ட் என்ற நிறுவனத்தை நிறுவியவர். தற்போது, நாட்டின் முதன்மையான வைர உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக இது இருக்கிறது.  


நாட்டை திரும்பி பார்க்க வைத்த தொழிலதிபர்:


வைரத்தை வெட்டுவதற்காகவும் அதை பாலிஷ் செய்வதற்காகவும் தொழிற்சாலை ஒன்றை சூரத்தில் நிறுவியுள்ளார். ஏற்றுமதி அலுவலகம் மும்பையில் அமைத்துள்ளார். 2014 வாக்கில், வைர உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உருவெடுக்க செய்தார். கடந்த 1992 ஆம் ஆண்டு, தனது மூன்று சகோதரர்களுடன் சேர்ந்து, வைர உற்பத்தித் துறையில் கடுமையான போட்டிக்கு மத்தியில் ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அடித்தளம் அமைத்தார் தன்ஜி. 


நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி, வைர உற்பத்தி துறையில் அதை தனித்து நிற்க வைத்துள்ளது. தனது தொலைநோக்கு அணுகுமுறையால் 2005ஆம் ஆண்டு, ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸின் கீழ் "கிஸ்னா" என்ற நகை பிராண்டை அறிமுகப்படுத்தினார் சவ்ஜி தன்ஜி. இன்று, இந்தியாவின் மிகப்பெரிய வைர நகை பிராண்டாக கிஸ்னா விளங்குகிறது. நாடு முழுவதும் 6,250க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது. 


தன்ஜியின் நிறுவனத்தில் 6500 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சாவ்ஜி தன்ஜி, நாட்டின் சிறந்த முதலாளிகளில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸை வாரி வழங்கியுள்ளார். நகைகள், கார்கள், பிளாட்கள், நிலையான வைப்புத்தொகை ஆகியவற்றை தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். 


மகனுக்கு எடுத்துக்காட்டாக திகழும் தந்தை:


புகழின் உச்சியிலும், அடக்கமான மனிதராகவே சாவ்ஜி தன்ஜி தோலாக்கியா அறியப்படுகிறார். எளிமையான வாழ்க்கை முறையை தேர்வு செய்து வாழ்ந்து வருகிறார். தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வரும் அதே சமயத்தில் தனிப்பட்ட பண்புகளையும் பேணி பாதுகாத்து வருகிறார். தன்ஜி தோலாக்கியாவின் பயணம், எடுத்த துணிச்சலான முடிவுகள், அவரது மகன் திரவிய தோலாக்கியாவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. 


தன்ஜி, தனது மகன் திரவியாவை குடும்பப் பெயரைப் பயன்படுத்தாமல் தனித்து தொழிலை தொடங்க ஊக்குவித்தார். செருப்பு கடை, மெக்டொனால்ட்ஸ், கால் சென்டர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் திராவ்யா பணிபுரிந்துள்ளார். பேக்கரியில் நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு பணிபுரிந்துள்ளார். நல்ல வாழ்க்கை பாடங்களை கற்று கொள்ள இது வாய்ப்பாக அமைந்தது. 


ரஜினி நடித்த தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வருவது போல முன்னணி தொழிலதிபராக இருந்த போதிலும், தன்ஜி தனது மகனை பேக்கரிக்கு வேலைக்கு அனுப்பி வைத்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.