மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். மல்காபூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 53இல் அதிகாலை 2.30 மணியளவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 


இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து:


பாலாஜி டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்று அமர்நாத் யாத்திரைக்குச் சென்று ஹிங்கோலி மாவட்டத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. ​​ராயல் டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மற்றொறு பேருந்து நாசிக் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, நந்தூர் நாகா மேம்பாலத்தில் இரு பேருந்துகளும் மோதி விபத்து நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நந்தூர் நாகா என்ற இடத்தில் பேருந்து ஒன்று மற்றொன்றை முந்திச் செல்ல முயன்றபோது, இரண்டு பேருந்துகளும் மோதிக்கொண்டன. ஆறு பயணிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த 20 பேர் புல்தானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய காயங்களுடன் தவித்து வந்த 32 பயணிகளுக்கு அருகிலுள்ள குருத்வாராவில் முதலுதவி அளிக்கப்பட்டது.


இறந்தவர்களில் அமர்நாத்தில் இருந்து திரும்பி கொண்டிருந்த பேருந்தின் டிரைவரும் ஒருவர். "பேருந்தை சாலையில் இருந்து அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது" என நெடுஞ்சாலை காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.


தொடரும் சாலை விபத்துகள்:


சமீபத்தில் புல்தானா மாவட்டத்தில் நடந்த இரண்டாவது பெரிய பேருந்து விபத்து இதுவாகும். கடந்த ஜூலை 1ஆம் தேதி, சம்ருத்தி-மஹாமார்க் விரைவுச் சாலையில் பயணிகள் பேருந்து தீப்பிடித்ததில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் தீயில் கருகி இறந்தனர். மேலும், எட்டு பேர் காயமடைந்தனர்.


விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன்" என்றார்.
இந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வருத்தம் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.


முன்னதாக, மே 23ஆம் தேதி, புல்தானா மாவட்டத்தில் நாக்பூர்-புனே நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.


இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.



2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.




2021-ம் ஆண்டு நடந்த விபத்துகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,28,825, மாநில நெடுஞ்சாலைகளில் 96,382, மற்ற சாலைகளில் 1,87,225 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 56,007, மாநில நெடுஞ்சாலைகளில் 37,963, மற்ற சாலைகளில் 60,002 பேர் மரணம் அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் 1,17,765, மாநில நெடுஞ்சாலைகளில் 92,583, மற்ற சாலைகளில் 1,74,100 பேர் காயம் அடைந்துள்ளனர்.