இந்தியாவில் அரிதிலும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஆனால், மரண தண்டனை, நாகரீக சமூகத்திற்கு உகந்தது அல்ல என்றும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:


இந்த சூழலில், மரண தண்டனையை நிறைவேற்றப்படும் விதம் குறித்து உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.


அதாவது, தூக்கின் மூலம் மரண தண்டனையை நிறைவேற்றப்படுவதற்கு பதிலாக இன்னும் கண்ணியமான, வலி குறைவாக இருக்கும் வகையிலான, சமூக ரீதியாக ஏற்று கொள்ளும்படியான வழியில் சிறைவாசிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தரவுகளை வழங்கும்படி மத்திய அரசை  உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. 


தூக்கு தண்டனைக்கு எதிராக வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, இந்தியைாவில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் முறை குறித்து மறுபரிசீலனை செய்ய நிபுணர் குழு அமைக்கவும் ஆலோசனை வழங்கியது. 


தூக்கு தண்டனைக்கு முற்றுப்புள்ளியா?


இதுகுறித்து டி.ஒய். சந்திரசூட் கூறுகையில், "அத்தகைய குழுவில் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் வல்லுநர்கள், சட்டப் பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் இடம்பெறுவார்கள். இதற்காக, சில தரவுகள் தேவைப்படுகின்றன. அதன் அடிப்படையில் மிகவும் மனிதாபிமான மரணதண்டனை முறை உள்ளதா என்பதை ஆராய முடியும். எனவே, தூக்கு தண்டனையை அரசியலமைப்புக்கு எதிரானதாக அறிவித்துவிடலாம்.


தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றால், எங்களுக்கு சிறந்த தரவுகள் தேவை. தூக்கு தண்டனையின் தாக்கம், அதனால் ஏற்படும் வலி, எப்போது மரணம் நிகழ்கிறது, நபரை தூக்கிலிடுவதற்கு தேவைப்படும் வளம் போன்ற தரவுகள் தேவை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மனித மாண்புக்கு இணங்க வேறு விதமான மரணதண்டனையை பரிந்துரைப்பதில் என்ன முன்னேற்றம் அடைந்துள்ளன என்பதை அறிய வேண்டும்" என்றார்.


பின்னர் பேசிய நீதிபதி நரசிம்மா, "தூக்கிலிடுவது வலியற்றதுக்கு மிக நெருக்கமானது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. ஊசி போட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவது எப்பொழுதும் வெற்றி பெறவில்லை. இங்கே கேள்வி என்னவென்றால், விஞ்ஞானம் என்ன வழங்குகிறது என்பதுதான். அறிவியலின் படி சிறந்த முறை எது என்பதுதான் கேள்வி" என்றார்.


ரிஷி மல்ஹோத்ரா தாக்கல் செய்த மனுவில், "மனிதாபிமான, விரைவான மற்றும் கண்ணியமான மாற்றை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மரண ஊசியுடன் ஒப்பிடும்போது தூக்கில் தொங்குவது கொடூரமானது. மற்றும் காட்டுமிராண்டித்தனமானது" என்று குறிப்பிட்டிருந்தார்.


மத்திய அரசின் வாதம்:


கடந்த 2018ஆம் ஆண்டு, தூக்கு தண்டனைக்கு ஆதரவாக மத்திய அரசு பிரமாண பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. அதில், தூக்கில் போடுவது காட்டுமிராண்டித்தனமானது இருப்பதாக தாங்கள் கருதவில்லை என மத்திய அரசு வாதிட்டம் குறிப்பிடத்தக்கது.