இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக அரசியல் சாசன அமர்வில் வழக்கு விசாரணை நேரடியாக இன்று ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில் இன்று முதல் அது நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று முதல் முறையாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் 4 வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான இந்த அமர்வின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பட்டது. இந்தச் சூழலில் உச்சநீதிமன்றத்தின் நேரலையை ரெக்கார்ட் செய்யவோ வேறு நபர்கள் ஒளிப்பரப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்ற நேரலை தொடர்பான நிபந்தனைகள்:
- காட்சி, அச்சு உள்ளிட்ட எந்த வகை ஊடகமாக இருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் நேரலையை ரெக்கார்டிங் செய்யவோ, தங்களுடைய தளத்தில் ஒளிபரப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குடன் சேர்ந்து தகவல் தொடர்புச் சட்ட பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப்படும்.
- இந்த வழக்கு விசாரணையின் நேரலையை பார்க்கும் எந்த நபராக இருந்தாலும் மேலே கூறப்பட்ட விதியை பின்பற்ற வேண்டியது அவசியம்.
- உச்சநீதிமன்றத்திடம் இருந்து எழுத்து பூர்வமாக அனுமதி பெற்ற பிறகே நேரலையை ரெக்கார்டிங் செய்யவோ, தங்களுடைய தளத்தில் ஒளிபரப்பவோ முடியும்.
- உச்சநீதிமன்றத்தின் நேரலை பதிவுகள் அனைத்தும் நீதிமன்ற தேவைகளுக்கு மற்றும் கல்வி தொடர்பான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். இவை எதுவும் தொழில் முறைச்சார்ந்த பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட கூடாது.
- உச்சநீதிமன்ற நேரலையை வேறு எந்த ரெக்கார்டிங் சாதனத்தை பயன்படுத்தியும் ரெக்கார்ட் செய்ய கூடாது.
உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையை நேரலை செய்வது தொடர்பாக 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தார். அந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேரலை அல்லது வேப் காஸ்டிங் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள் கூட்டம் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இன்று முதல் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழக்கு விசாரணை நேரலை செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டிருந்தது. அந்த முடிவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா விசாரணை செய்த வழக்குகள் மட்டும் நேரலை செய்யப்பட்டிருந்தது. அவருடைய கடைசி நாள் பணி என்பதால் அது மட்டும் நேரலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.