நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவிகிதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் மசோதாவை நிறைவேற்ற பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவகவுடா தொடங்கி வாஜ்பாய், மன்மோகன் சிங் வரையில் பலரின் ஆட்சி காலத்தில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


இறுதியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கடந்த 2010ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றியது. மாநிலங்களவையில் நிறைவேற்றினாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், அதை மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. 


2024 தேர்தலுக்கு முன்பாக மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா?


இதை தொடர்ந்து, கடந்த 13 ஆண்டுகளாக மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக தலைமையிலான அரசு மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது. மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு மக்களவை தேர்தலிலேயே மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 


106ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் இந்த மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அரசியலைப்பு திருத்தத்தில் குறிப்பிடப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


உச்ச நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?


ஜெயா தாக்கூர் என்பவர் தொடர்ந்த மனுவில், "குறிப்பிட்ட அந்த வாசகத்தை மட்டும் செல்லாது என அறிவிக்க வேண்டும். சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை காலவரை இன்றி தள்ளி வைக்கக்கூடாது" என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பல முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது.


அரசியலில் பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் இது மிக சிறந்த முயற்சி என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக தலையிடுவதில் பல சந்தேகங்களை கிளப்பிய உச்ச நீதிமன்றம், "இதை செய்வது மிக கடினமான ஒன்று. வெளியில் இருந்து கொண்டு நாங்கள் சட்டத்தை இயற்றுவது போல அமைந்துவிடும்" என தெரிவித்துள்ளது.


வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ். வி. என். பட்டி ஆகியோர் கொண்ட அமர்வு, வழக்கின் விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.