தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களை வெளியிடுவது அவசியம். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தங்களின் சொத்து விவரங்களையும் வருமான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். அதுமட்டும் இன்றி, இணையரின் (கணவன்/மனைவி) சொத்து விவரங்களையும் வருமான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு:
இந்த நிலையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கணிசமான மதிப்போ அல்லது ஆடம்பரமான வாழ்க்கை முறையை பிரதிபலிக்காத பட்சத்தில் அசையும் சொத்து விவரங்கள் அனைத்தையும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதோடு, வேட்பாளரின் இணையருக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தேசு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கரிகோ க்ரி. இவரின் மனைவி மற்றும் மகனுக்கு சொந்தமான மூன்று வாகனங்கள் பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
சொத்து விவரங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டுமா?
க்ரியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர் ஒருவர், இது தொடர்பாக குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், க்ரியின் வெற்றி செல்லாது என அறிவித்தது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக க்ரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள், க்ரியின் வெற்றி செல்லும் என அறிவித்தனர்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், குறிப்பிட்ட அந்த வாகனங்களை க்ரி பரிசாகவும் வழங்கி இருப்பதும் விற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, அந்த வாகனங்களை க்ரியின் மனைவி மற்றும் மகனுக்குச் சொந்தமானதாகக் கருத முடியாது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 123(2)ன்படி வாகனங்கள் தொடர்பான விவரங்களை வெளியிடாதது ஊழலாக கருத முடியாது. வாழ்வின் அனைத்து விவரங்களையும் வாக்காளர்கள் முன் வேட்பாளர் சமர்பிக்க வேண்டும் என கூறுவதை நாங்கள் ஏற்க விரும்பவில்லை.
வாக்காளருக்கு தொடர்பு இல்லாத அல்லது பொருத்தமற்ற விஷயங்களை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டாம். அவர்களுக்கும் தனியுரிமை உண்டு" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: PM Modi Chennai: "சென்னை என் மனதை வென்றது" ரோட்ஷோவுக்கு பிறகு பிரதமர் மோடி உருக்கம்!