Gujarat Adani Port Case: அதானி துறைமுகங்களுக்கு சாதகாமாக, துறைமுக நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட 108 ஹெக்டேர் நிலத்தை மீட்குமாறு மாநில அரசைக் கேட்டுக்கொண்ட குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் இன்று இடைநிறுத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலமானது, கச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு அருகில் உள்ளது.இந்த வழக்கில் குஜராத் அரசின் பதிலை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
- 2005ஆம் ஆண்டு அதானி துறைமுகத்துக்கு 108 ஹெக்டேர் நிலமானது ஒதுக்கப்பட்டது. அப்போது இருந்தே, இந்த விவகாரம் தொடர்கிறது.
- 2010 ஆம் ஆண்டில், அதானி போர்ட்ஸ், நிலத்திற்கு வேலி அமைக்கத் தொடங்கியபோது, அங்குள்ள நவினல் கிராமத்தில் வசிப்பவர்கள் ஒரு பொது நல வழக்குடன் உயர் நீதிமன்றத்தை அணுகினர். 231 ஹெக்டேர் நிலத்தை அதானி துறைமுகத்திற்கு ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.. அது கால்நடை மேய்ச்சல் நிலம் என்பதால், பற்றாக்குறையை இக்கிராமம் எதிர்கொள்கிறது என்றும், இந்த ஒதுக்கீட்டின் மூலம் தங்களுக்கு 45 ஏக்கர் மட்டுமே இருக்கும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
- 2014ல், 387 ஹெக்டேர் அரசு நிலத்தை மேய்ச்சலுக்காக வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாநில அரசு கூறியதையடுத்து, இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- அது நடக்காததால், நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. 2015ல், மாநில அரசு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்து, கிராம பஞ்சாயத்துக்கு 17 ஹெக்டேர் மட்டுமே ஒதுக்கீடு செய்ய உள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்தது. 7 கிலோமீட்டர் தொலைவில் மீதமுள்ள நிலத்தை ஒதுக்கலாம் என்று மாநில அரசு முன்மொழிந்தது. இதை கிராம மக்கள் நிராகரித்தனர். கால்நடைகள் மேய்ச்சலுக்கு அதிக தூரம் இப்பகுதி உள்ளது என தெரிவித்தனர்.
- இதையடுத்து, ஒரு தீர்வைக் கொண்டு வருமாறு மூத்த வருவாய் அதிகாரி ஒருவரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. 2005 ஆம் ஆண்டு அதானி துறைமுகத்திற்கு ஒதுக்கப்பட்ட கிட்டத்தட்ட 108 ஹெக்டேர் -- 266 ஏக்கர் -- நிலத்தை திரும்பப் பெற மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அந்த அதிகாரி பதிலளித்தார். அதானி பவர் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் நிலத்தில், அரசு நிலத்தையும் சேர்த்து கிராம மக்களுக்கு அரசு வழங்கும் என்று வருவாய்த்துறை தெரிவித்தது. அப்போது, இதனை அமல்படுத்துமாறு மாநில அரசை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், அதானி துறைமுகம் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் நிலம் தொடர்பான உத்தரவை நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, மாநில அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது, அதானி துறைமுக நிறுவனத்திற்கு பெரும் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.