குடும்பத்திற்காக இல்லத்தரசிகள் ஆற்றிய இன்றியமையாத பங்கு மற்றும் தியாகங்களை இந்தியாவில் இருக்கும் ஆண்கள் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இல்லத்தரசிகளின் உரிமைகள் என்னென்ன? குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125இன் கீழ் விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்ணும் தனது முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரலாம் என நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்றம் அமர்வு இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
திருமணமான அனைத்து பெண்களுக்கும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் ஜீவனாம்சம் கோருவதற்கான சட்டம் பொருந்தும் என கூறிய நீதிமன்றம், இல்லத்தரசிகளின் உரிமைகளை குறிப்பிட்டு பேசியுள்ளது.
கணவர்கள், தங்கள் மனைவிகளுக்கு நிதி உதவி செய்வது அவசியம் என குறிப்பிட்ட நீதிமன்றம், "குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக கூட்டு வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது, ATM கார்டை பகிர்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி: விவாகரத்து பெற்ற தன்னுடைய மனைவிக்கு மாதந்தோறும் 20,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என முகமது அப்துல் சமத் என்பவருக்கு குடும்பநல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து, தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் முகமது அப்துல் சமத் மனு தாக்கல் செய்தார்.
குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், ஜீவனாம்ச தொகையை 10,000 ரூபாயாக குறைத்தது. இதை எதிர்த்து முகமது அப்துல் சமத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில்தான், உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்துகளை தெரிவித்துள்ளது. வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி நாகரத்னா, "திருமணமான பெண்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து பெண்களுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125 பொருந்தும்.
திருமணமான அனைத்து பெண்களுக்கும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் ஜீவனாம்சம் கோருவதற்கான சட்டம் பொருந்தும். ஜீவனாம்சம் என்பது உதவி அல்ல. ஆனால், திருமணமான பெண்களின் அடிப்படை உரிமை.
இந்த உரிமையானது மத எல்லைகளைத் தாண்டி, திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் பாலின சமத்துவம் மற்றும் நிதிப் பாதுகாப்பு என்ற கொள்கையை வலுப்படுத்துகிறது. இல்லத்தரசியான மனைவி, உணர்ச்சிப்பூர்வமாக மட்டும் இன்றி வேறு வழிகளிலும் தங்களைச் சார்ந்திருப்பதை சில கணவர்கள் உணர்ந்து கொள்வதில்லை" என குறிப்பிட்டுள்ளார்.