நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாய் முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார்.


அந்த மனுவில் நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையைக் கொண்டு வர வேண்டும், ஆசிரியர்களுக்கும் இதனை அமல்படுத்த வேண்டும். யூனிஃபார்ம் கோட் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.


இந்தக் கோரிக்கை மீதான விசாரணை முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில்,  இந்த வழக்கு தங்கள் அதிகார வரம்புக்குள் வருவது அல்ல என்றும், இவ்வழக்கில் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் நீதிமன்றம் இல்லை என்றும் தெளிவுபடுத்தி, வழக்கில் மேற்கொண்டு விசாரிக்க எதுவுமில்லை எனக்கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.


 






 






நாடு முழுவதும் ஒரே மாதிரியான சீருடையைக் கொண்டு வருவது சாத்தியமானது அல்ல என ஏற்கெனவே கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் ஒன்றாக இருக்கும் நிலையில் தற்போது உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.


முன்னதாக கேரளாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பாலின சமத்துவ ஆடைகளை சீருடையாக நடைமுறைப்படுத்தலாம் என்ற திட்டத்தை கேரள அரசாங்கம் பரிசீலனை செய்தது.


அரசின் இந்தத் திட்டத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பல்வேறு எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அம்மாநில சட்டப்பேரவையில் உறுப்பினர் கே. கே ஷைலஜா தாக்கல் செய்த அறிக்கைக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அளித்த பதிலில், 'பள்ளிகளில் சமத்துவ சீருடை, சமத்துவ இருக்கைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை' என்று கூறினார்.


 






மேலும், "ஒவ்வொருவருக்கும் அவர்களின் உணவு, உடைகளைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமை உண்டு. அத்தகைய உரிமையும் சுதந்திரமும் அவசியமானவை. பாலின சமத்துவத்தை உருவாக்குவதே அரசின் நோக்கமாக இருந்ததே தவிர்த்து, பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதிப்பது அல்ல.


ஒவ்வொரு பள்ளியும் அந்தப் பள்ளிக்கான சீருடைகளை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் குழப்பங்கள் இருந்தால் அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து பேசி முடிவெடுக்கலாம். பாலின சமத்துவ சீருடை சார்ந்த எந்த உத்தரவுகளையும் அரசு வெளியிடவில்லை'' எனத் தெரிவித்தார்.