டெல்லியின் காற்று மாசு மோசமாக உள்ள நிலையில், இதை தடுத்து நிறுத்த போதுமான நடவடிக்கை எடுக்க தவறியதாக மத்திய அரசின் மீதும் பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசின் மீதும் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காற்று மாசால் திணறும் தேசிய தலைநகரம்:
டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை காற்று மாசு கொஞ்சம் கொஞ்சமாக டெல்லியில் அதிகரித்துக்கொண்டே செல்லும். காற்றின் தரக் குறியீடு 50 என்றிருந்தால் அது நல்ல நிலைமை, 100 முதல் 101 என்றளவில் இருந்தால் திருப்திகரமான தரம், 101 முதல் 200 வரை இருந்தால் அது மிதமானது என காற்றின் தரத்தை அளக்கும் அமைப்பு கூறுகிறது.
201 முதல் 300 வரை இருந்தால் அது மோசமான தரம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான தரம், 401 முதல் 500 என்றிருந்தால் அதிபயங்கர மோசம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்றின் தரம் 300க்கு மேல் இருக்கிறது.
சுவாசு கோளாறுகள் உட்பட, ஆஸ்துமா தொடங்கி நுரையீரல் புற்றுநோய் வரை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காற்றின் தரம் அங்கு மோசமாக இருக்கிறது. டெல்லியின் காற்று மாசுவுக்கு அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளே காரணம் என சொல்லப்படுகிறது.
லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதிகள்:
இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தொடர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் பஞ்சாப், ஹரியானா அரசுகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி உச்ச நீதிமன்றம் இன்று கடிந்து கொண்டுள்ளது.
டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, ஏ. அமானுல்லா மற்றும் ஏ.ஜி. மசி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையில், சட்டத்தை மீறும் விவசாயிகள் மீது வழக்குத் தொடராதது, நிதி அபராதம் விதிக்காதது குறித்து மாநில அரசுகளுக்கு எதிராக கேள்வி எழுப்பினர்.
மாசு எதிர்ப்பு சட்டங்களை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட அம்சங்களை கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 15இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்க முடியாத அளவுக்கு செய்ததாக அரசுகள் மீது உச்ச நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.