Wayanad Bypoll 2024:  வயநாடு பகுதியில் பிரியங்கா காந்தி நடத்திய ரோட் ஷோவில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.


வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி


அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும் ரேபரேலி தொகுதி எம்.பி., பதவியை தக்கவைத்துக் கொண்டு, வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 13ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பேரணியாக சென்றார்.






பிரியங்கா காந்தி ரோட் ஷோவில் குவிந்த தொண்டர்கள்


திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பிரியங்கா காந்தி, கல்பெட்டா நகரில் ரோட் ஷோ நிகழ்த்தினார். அப்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி  மற்றும் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர். முதல்முறையாக மக்கள் பிரதிநிதி பதவிக்காக தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு, சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர். காங்கிரஸ் கட்சியின் கொடிகளை ஏந்தியபடி அவர்கள் வெற்றி முழக்களை எழுப்பினர். வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்ல, பிரியங்கா காந்தி திரண்டு நின்ற பொதுமக்களுக்கு கையசைத்தபடி பயணித்தார். தொடர்ந்து, பொதுக்கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.






”35 ஆண்டுகளில் முதல்முறை” - பிரியங்கா காந்தி


பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “கடந்த 35 ஆண்டுகளில் பல்வேறு தேர்தல்களின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்துள்ளேன்.  ஆனால், எனக்கு ஆதரவளியுங்கள் என எனக்காக உங்களிடம் கேட்பது இதுவே முதல்முறையாகும்.  இடைத்தேர்தலில் வயநாட்டு மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான போட்டிக்கு தேர்தெடுக்கப்பட்டதை கவுரவமாக கருதுகிறேன். வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் மக்கள் காட்டிய தைரியம் என்னுள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


“வயநாட்டிற்கு இரண்டு எம்.பிக்கள்”


இந்த பண்புகள் (உண்மையும் அகிம்சையும்) அன்பிற்காகவும் ஒற்றுமைக்காகவும் இந்தியா முழுவதும் 8000 கிமீ நடக்க என் சகோதரனைத் தூண்டியது. உங்கள் ஆதரவு இல்லாமல் அவரால் அதைச் செய்திருக்க முடியாது. உலகம் முழுவதுமே அவருக்கு எதிராக நின்றபோது நீங்கள் என் சகோதரனுடன் நின்றீர்கள். அவர் தொடர்ந்து போராடுவதற்கு உங்கள் பலத்தையும் தைரியத்தையும் கொடுத்தீர்கள். எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் எப்போதும் உங்களுக்கு கடன்பட்டிருக்கும்.


அவர் உங்களை விட்டு விலகினார் என்று எனக்கு தெரியும். உங்களுக்கும் அவருக்கும் உள்ள பந்தத்தை நன் வலுப்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினைகளை அவர் எனக்கு விளக்கினார். நான் உங்கள் வீட்டிற்கு வந்து, உங்கள் பிரச்சனைகள் என்ன, அவற்றை நாங்கள் எவ்வாறு சமாளிக்கலாம் என்பதை உங்களிடமிருந்து நேரடியாகப் புரிந்துகொள்ள விரும்புகிறேன். வயநாடு மக்களுக்கான பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இரண்டு பேர் (பிரியங்கா & ராகுல் காந்தி) இருப்பார்கள்” என உறுதியளித்து பிரியங்கா காந்தி பேசினார்.


வேட்புமனுதாக்கல் செய்த பிரியங்கா காந்தி:


தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி, கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் மகன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே உள்ளிட்டோரும், பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்யும்போது உடனிருந்தனர்.