கடந்த ஆண்டு ஜீலையில் மேகாலயாவின் பழங்குடிகள் அல்லாத மாணவர்கள் ஆறு பேர் மீது முகமூடி அணிந்த இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். காவல்துறையோ அல்லது மேகாலயா அரசாங்கமோ இந்த வன்முறை குறித்து மேலதிக விசாரணை எதுவும் மேற்கொள்ளவில்லை. அது குறித்து ஷில்லாங் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் பாட்ரீஷியா, ”அரசாங்கம் இந்த விவகாரத்தில் என்ன செய்கிறது?, உள்ளூர் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா? “ என, சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதில் மேகாலயா முதல்வரையும் டேக் செய்திருந்தார்.
சர்சைக்குரிய வகையில் முகநூல் பதிவு செய்ததாக மேகாலயா ஷில்லாங் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் பாட்ரீஷியாவை கைது செய்து அண்மையில் அம்மாநிலப் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாட்ரீஷியாவின் பதிவு வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. முதல் தகவல் அறிக்கையை செல்லாது என அறிவிக்கும்படி வழக்கு தொடர்ந்தார் பாட்ரீஷியா. ஆனால் அப்படி அறிவிக்க முடியாது என மேகாலயா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பாட்ரீஷியா.
அவ்வழக்கு நீதிபதி நாகேஸ்வரா தலைமையிலான அமர்வுக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் பாட்ரீஷியா மீதான முதல் தகவல் அறிக்கையை செல்லாது என அறிவித்து வழக்கை முடித்து வைத்த நாகேஸ்வரா மற்றும் ரவீந்திர பட் தலைமையிலான அமர்வு, ‛சமூகத்தின் அமைதியைக் குலைத்து வெறுப்பைத் தூண்டும் வகையில் பேச்சுக்கள் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம்; மாறாக குடிமக்களின் பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரக்கூடாது” என கண்டனம் தெரிவித்தனர். அரசாங்கத்தின் இயலாமைக்கெல்லாம் சமூக அக்கறையுள்ள மக்கள் மீது வழக்கு தொடரக்கூடாது என்றும் நீதிபதிகள் காவல்துறையை கடிந்து கொண்டனர்.