சமீப காலமாக, நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்றம்  தெரிவித்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இளம் பெண்கள், பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார்.


"பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்"


சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரை விடுதலை செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்தது. பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் முழு சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டுள்ளனர்.


இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சித்த ரஞ்சன் தாஷ் மற்றும் பார்த்த சாரதி சென் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, "இரண்டு நிமிட பாலியல் இன்பத்திற்காக தன்னை தானே விட்டுக்கொடுக்கும்போது பெண் தோல்வியாளராக ஆகிறார்" என தெரிவித்தது.


உயர் நீதிமன்றத்தை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்:


நீதிபதிகள் தெரிவித்த கருத்து, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், "இது தேவையற்ற கருத்து" என உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றம்சாட்டப்பட்ட நபர் மற்றும் கொல்கத்தா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


வழக்கு விசாரணையின்போது பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் பங்கஜ் மிதாலி, "உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கள் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21 (வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம்)இன் கீழ் இளம் பருவத்தினரின் உரிமைகளை மீறுவதாகத் தோன்றுகிறது.


ஆட்சேபனைக்குரிய தேவைற்ற கருத்துகளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தவோ அல்லது கற்பிக்கவோக் கூடாது என்று நாங்கள் கருதுகிறோம்" என்றனர்.


இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் மூத்த வழக்கறிஞர் மாதவி திவான் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்காக வழக்கறிஞர் லிஸ் மேத்யூ நியமிக்கப்பட்டுள்ளார்.


இளம் பெண்களுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகள்:


1) உடல் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.


2) உடல் கண்ணியத்தையும் சுய மதிப்பையும் பாதுகாக்க வேண்டும்.


3) பாலினத் தடைகளைத் தாண்டி அவரது ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக செழித்து வளர வேண்டும்.


4) இரண்டு நிமிட பாலியல் இன்பத்திற்காக பாலியல் உணர்வுகளை விட்டுக்கொடுக்கும்போது பெண் தோல்வியாளராக ஆகிறார். எனவே, பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.