உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம். ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. 


உச்ச நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள்:


கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. 


இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாகவும் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட நீதிபதிகளை மட்டுமே மத்திய அரசு நியமிப்பதாகவும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். 


கொலீஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்:


இந்த நிலையில், மூன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்கு கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது. தற்போது, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய நீதிபதிகள் பதவியேற்கும் பட்சத்தில், உச்ச நீதிமன்றம் முழு பலத்துடன் இயங்க உள்ளது.


டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஸ் சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகிய நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.


கடைசியாக, இந்தாண்டு பிப்ரவரி மாதம், நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டபோது, உச்ச நீதிமன்றம் முழு பலத்துடன் இயங்கியது. உச்ச நீதிமன்றத்துக்கு இந்திய தலைமை நீதிபதி உள்பட 34 நீதிபதிகள் வரை நியமிக்கலாம். இந்தாண்டு 8 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றுள்ளனர். கடைசியாக, நீதிபதி எஸ். ரவீந்திர பட், ஓய்வு பெற்றார். வரும் டிசம்பர் மாதம், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஓய்வு பெறுகிறார். 


சீனியாரிட்டி, தகுதி, திறமை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜியம் விளக்கம் அளித்துள்ளது. இதை தவிர்த்து, சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் நியமனத்தின் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.