உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆண்டு முழுவதும் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி இந்து பெண்கள் ஐந்து பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். தற்போது, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மசூதிக்கு உள்ளே வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


முன்னதாக, ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வீடியோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிவலிங்கம் போன்ற தொன்மையான சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.


இது எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து ஆராய 'கார்பன் டேட்டிங்' முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்து மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்திருந்தது. 


கடந்த மாதம், சிவலிங்கம் போன்ற சிலையின் தொன்மத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் போன்ற விஞ்ஞானப்பூர்வமான ஆய்வை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்த ஐந்து இந்து பெண்களில் நான்கு பேர் கடந்த மாதம் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், இந்து கடவுகளின் சிலைகள், மசூதிக்கு உள்ள இருப்பதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 


ஆனால், கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுக்கு மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மசூதிக்கு உள்ளே சிலையை வழிபடுவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதாகவும் அதற்கும் மசூதி கட்டிடத்திற்கும் தொடர்பில்லை என்றும் மசூதி கமிட்டி தெளிவுப்படுத்தி இருந்தது.


சிவலிங்கம் என சொல்லப்படும் சிலை, உண்மையிலேயே நீரூற்று என்றும் மசூதிக்கு செல்லும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு முன்னதாக தங்களைதானே சுத்தம் செய்ய அதை பயன்படுத்தி வருவதாகவும் மசூதி கமிட்டி விளக்கம் அளித்திருந்தது.


இதை தொடர்ந்து, சிவலிங்க விவகாரத்தில் தற்போது நிலையே தொடர இந்து தரப்பும் இஸ்லாமிய தரப்பும் ஒப்பு கொண்ட நிலையில், குறிப்பிட்ட பகுதியை சீல் வைத்து பாதுகாப்பதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று நீட்டித்தது.


இந்து பக்தர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், "மே மாதம், சிவலிங்கம் போன்ற சிலை உள்ள பகுதியை பாதுகாக்கக் கோரி பிறப்பித்த உத்தரவு நவம்பர் 12ஆம் தேதியுடன் காலாவதியாகிறது" என்று அடிக்கோடிட்டுக் கூறியதை அடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டதாக சிலர் நம்பி வருகின்றனர். 1980கள் மற்றும் 90களில் பாஜக எழுப்பிய மசூதி பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இதை தவிர, அயோத்தி மற்றும் மதுரா மசூதி விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.